*ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ்* *மித்ரா* வா ; *இந்து அற வாரியமா ?*


*
கூட்டுறவுத் தந்தை,நம்துன் சம்பந்தன்* அன்று

     கூட்டுறவைஒற்றுமையை இனங்களுக்குள் வலுவாய்

நாட்டுதற்கே *ஒற்றுமைசார் அமைச்சரென* ஆனார் !

      நமக்கன்று தெரிந்தவரை இனங்களுக்குள் நன்கு

வேட்கையுடன் ஒற்றுமையை உருவாக்கி, நாட்டில்

      மேலான அமைதியையும் நிலைநாட்டும் நோக்கைக்

கோட்டைகட்டிக் காப்பதுவே ஒற்றுமைசார் அமைச்சின்

      கொள்கையெனத் தெரிந்துள்ளோம் ; அதுதானே உண்மை !

இனங்களிடை ஒற்றுமையை வளர்ப்பதனை விட்டே,

      இந்தியரின் *பொருள்,கல்வி சமூகத்தின் வளர்ச்சி*

தனையுயர்த்தும் திட்டத்தைத் தன்னகத்தே கொண்ட

    தன்மையுள *மித்ரா* வை ஒற்றுமைசார் அமைச்சுத்

தனக்குக்கீழ் கொண்டிருக்கக் காரணம்தான் என்ன ?

     தன்பொறுப்பாம் ஒற்றுமையை வளர்ப்பதற்கு மாறாய்ப்

பணப்பங்கு செயுமமைச்சாய் மாறிடுதல் சரியா ?

       பகிர்வதற்கே ஒற்றுமைக்குப் பதில் *பணமாய்* இருக்கும் !

ஒற்றுமையை வளர்ப்பதற்குச் செலவழிக்கும் பணம்தான்

     ஒற்றுமையின் அமைச்சிடமே இருந்திடவே வேண்டும் !

உற்றதோர் இனத்தவரின் மேம்பாட்டுக் காக

     ஒற்றுமைசார் அமைச்சினது பணம்பயனாய் நின்றால்

மற்றஇனத் தார்கேள்வி கேட்டிடமாட் டாரா ?

     மல்லாந்து படுத்தேநாம் யோசிக்க வேண்டும் !

ஒற்றுமையை அதிகரித்தே அமைதியினை நாட்டில்

       உருவாக்கும் முயற்சிக்கும் பங்கம்வர லாமே !?

புனிதயிடம் ஒற்றுமையின் அமைச்சுக்குள்  விரைவாய்ப்

    புகுந்திடலாம் பணத்தாலே ஊழல்பெருச் சாளி !

தனியிடத்தில் *மித்ராவும்* இருந்ததனைக் *காக்கும்*

     தகுதிபெற்றோர் நேர்மைதனை அரசாங்கம் ஆய்ந்தே

இனி *மித்ரா* முறையாக எப்போதும் இயங்கும்

       என்றுறுதி செய்தால்தான் *இந்தியர்முன் னேறத்*     

தனிவழியே உருவாகும் ; இதைவிடுத்து *மித்ரா*

    தான்,ஒற்று மையமைச்சில் இருந்தால்சிக் கல்தான் !

தேசியத்தின் அளவினிலே ஒற்றுமையின் அமைச்சின்

      செயல்பாடும் உண்டதிலே மாநிலமாம் பினாங்கு

தேசியத்தின் அளவிலிலை ! அதன் *இந்து அறஞ்சார்*

       *வாரிய* மேன் ஒற்றுமையின் அமைச்சின்கீழ் ? சரியா ?

யோசித்தால் ஒற்றுமைகொள் அமைச்சின்கீழ் *இந்து*

    உள *அறத்தின் வாரியமும்* எவ்வகையில் சேரும் ?

நேசிப்போம் ஒற்றுமையை  என்பதற்கு மாறாய்

     *நேசியொரு மதம்* எனலா அவ்வமைச்சின் கொள்கை ?

பெருகிவிட்ட *இனவாத, மதவாத* நோயின்

      பிடியிருந்து மக்களையே மீட்டெடுக்கும் பெரிய

தொருவேலை ஒற்றுமைசார் அமைச்சுக்கே உண்டாம் !

      உருப்படியாய் அவ்வேலை முடிப்பதற்கே பொறுப்பாய்

இருப்பதற்கே அவ்வமைச்சும் உழைத்திட்டால் *மித்ரா*

       எப்படித்தான் அதன்கீழெ செயல்படவும் முடியும் ?

விருப்புற்றுக் கேட்கின்றோம் இந்தியர்கள் சார்பில் ;

     *மித்ராவும், வாரியமும்* தனித்தியங்கச் செய்வீர் !

                                                                             *பாதாசன்*