*முழுக்கடவுள் – முழுமனிதம்* *இரண்டும் என்றும் ஒன்றே !*

*அறிவியலும்* சரிபாதி அதில் *நம் பிக்கை*

        அதுவுமொரு சரிபாதி *மதத்தில் உண்டாம் !*

அறியாமல் இதைப்பலரும் புரியா மல்தான்

      அடுத்தவரும் பிறர்மதத்தை விமர்சித் தேதான்

வறியதுதான் தன்மனமும் அறிவும் என்றே

     மற்றவர்க்கு மெய்ப்பித்தே தங்கள் வாதம்

சரியென்றே சாதிக்கும் சழக்கர் தம்மைச்

      சரிசெய்யும் முயற்சியிலே *இறையே தோற்கும் !*

மதத்தைநுனிப் புல்மேயும் *ஆடாய் மேய்வோர்*

      *மதவாத நம்பிக்கை* பொய்யே என்பார் !

மதவாதம் *நம்பிக்கைக் குரிய தென்போர்*

     மதத்திலுள *அறிவியலை* ஏற்றல் நன்றே !

மதம்,எதிலும் தப்பில்லை ; *தன்ம தந்தான்*

      *மன்பதையில் பெரிதென்பா ரிடமே   தப்பாம் ;*

இதையுணர்வார் எம்மதமும் சம்ம தந்தான்

       என்றேற்பார் ; ஏற்காதார் மனிதம் இல்லார் !

*ஆதிமதம் சைவம்* என்றும்,  அதிலி ருந்தே

        அடுத்தமதம் *வைணமும்* வந்த தென்னும்

நீதியதற் கோர்நிகழ்வாய் ஒன்றைச் சொல்வர் !

       நீறணிந்தோன் *அடிமுடியைக்* காண்ப தற்கே

*மாதவனால், பிரம்மா* வால் முடிந்த தில்லை !

        மாந்தர்க்கே இதுசொல்லும் புத்தி என்ன ?

சேதியிதை அறிந்தவர்கள் *ஓர்ம தத்தைத்*

     தெளிவாகப் புரிந்திடவே முடியா(து) அஃதே !

*விஞ்ஞானி* யால்கூடப் பலவற் றுக்கே

      விளக்கங்கள் தரமுடிவ தில்லை ; மேலும்

*அஞ்ஞானி* யால்கூட எல்லா வற்றின்

       *அடிப்படையை* ஆய்ந்துரைக்க இயல வில்லை !

*மெய்ஞ்ஞானம்* என்பதுவும் அஞ்ஞா னிக்கும்

          விஞ்ஞானி யார்க்குமென்றும் தெரியு மென்றால்

*பொய்ஞ்ஞானம்* அதுவாகும் என்றே பாரில்

        புரிந்ததுதான் *முழுமனிதம்* ஆகும் கண்டீர் !

முழுமனிதம் என்றெவரும் தன்னைத் தானே

        மொழிந்திடவும் இயலாதாம் என்னும் போதே

*முழுக்கடவுள்*  யாரென்னும்  விளக்கம் தோன்றும் ;

         முழுக்கடவுள் யாரென்றே உணர்ந்த பின்தான்

முழுமனிதம் தானல்ல  என்னும் உண்மை

        முற்றாக ஒருவருக்குப் புரியும் என்றால்

முழுமனிதம் முழுக்கடவுள் *எனும் ரண்டும்*

முடிவினிலே *ஒன்றென்னும்* ஞானம் தோன்றும் !

                                     .                                    *பாதாசன்*