*இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்க* *ஆசிரியர்கள் தட்டுப்பாடா ? கட்டுப்பாடா ?*

பதினைந்து மாணவர்கள் *இருந்தால் தானே*

    பள்ளிகளாம் இடைநிலையில் தமிழ்ப டிக்கப்

பதிந்திடவே முடியுமெனும் *விதியை மாற்றிப்*

       *பத்துமா ணவரிருந்தால் போதும் ஆங்கே*

*பதிந்துதமிழ் படித்திடவே முடியும்* என்று

         பாசமுடன் *பிரதமரும்* சொல்லி யுள்ள

பதிலுமொரு பக்கத்தில் இருந்த போதும்

     படிப்பிக்க *ஆசிரியர் இல்லை யாமே !?*

இடைநிலையின் பள்ளிகளில் தமிழைக் கற்க

       இருக்கின்ற *அரும்வாய்ப்பை* இழப்ப தற்கு

நடைமுறையில் *பலபெற்றோர் இருக்கும் வேளை*

     நன்முறையில் தமிழ்கற்றுக் கொடுப்ப தற்கே

இடைநிலைப்பள் ளிகள்களிலே போது மானோர்

     இல்லை *தமிழ் ஆசிரியர்* என்னும் சேதி

இடிபோன்று விழுந்ததையா தமிழர் நெஞ்சில்!

    இதன் *தீர்வு கல்வியமைச் சகத்தின் கையில் !*

பல்கலையாம் *உப்சியிலே* தமிழைக் கற்றுப்

      பட்டயங்கள் பெற்றுள்ளோர் பலரி ருக்கச்

*சொல்வதுவோ தமிழ்கற்றுக் கொடுப்ப தற்குத்*

        *தோதான ஆசிரியர் இல்லை என்று !*

அள்ளிவிடும் இப்பொய்யைக் கேட்ப தற்கே

       ஆளில்லை யா ? நாங்கள் உள்ளோம் என்று

துள்ளியெழ வேண்டாமா தமிழப் பெற்றோர் ?

       *தூங்கியதும் போதாதா ? இனுமா தூக்கம் ?*

இடைநிலையின் பள்ளிகளில் பயிலு கின்ற

      இந்தியர்தம் பிள்ளையெலாம் தமிழ்ப டிக்க

உடனடியாய்ப் பதிந்திடவே பெற்றோர் முற்றாய்

       உடன்படவே செய்திடுவீர் ! அடுத்த தாகக்

கடமை,நம் உரிமையென முடிவு டுத்துக்

       கட்டாய மாய்த்தமிழைக் கற்பிக் கத்தான்

இடைநிலையில் *தமிழாசி ரியர்கள் தம்மை*

        *இப்போதே அமர்த்தட்டும் அரசாங் கத்தார் !*

                                                                                 *பாதாசன்*