இஎஸ்ஐ மருத்துவமனையில் பிஎம்ஜேஏஒய் அட்டைதாரர்களுக்கும் சிகிச்சை வசதி – மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார்

நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கே கே நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (இஎஸ்ஐசிஎச்) இன்று (07 ஜூலை 2025) நடைபெற்ற பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நலமான பாரதம்  வளமான பாரதம் எனும் நல்வாழ்வு மருத்துவ பரிசோதனை முகாமை அமைச்சர் தொடங்கிவைத்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டறிந்தார்.

பின்னர் இஎஸ்ஐசி மருத்துவமனையில், பிரதமரின் திவ்யாஷா (மாற்றுத்திறனாளிகள்) மையத்தின் மூலம் சுமார் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாறும் பாதையில் பொருளாதார வளர்ச்சியில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்றார்.  இத்துடன் நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதையும் மத்திய அரசு கடந்த 11ஆண்டுகளில் உறுதிசெய்துள்ளது என்று அவர் கூறினார். குறிப்பாக தொழிலாளர்கள் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர்களின் நலனில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதாகவும் உள்நோயாளிகளுக்கு 1000 படுக்கைகள் உள்ளன என்றும் அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு முதுநிலை மருத்துவ படிப்பில் 50 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன என்றும் இம்மருத்துவமனை பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் இஎஸ்ஐ மருத்துவக்காப்பீடு இல்லாத பொதுமக்களுக்கும் சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ராஷ்ட்ரிய வயோஸ்ரி யோஜனா மூலம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக உதவி உபகரணங்களை தொடர்ச்சியாக வழங்கி வருவதாக்கூறிய அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அண்மையில் திருப்பூரில் ஒரு இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்த அமைச்சர், விரைவில் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு மருத்துவமனை தொடங்கப்படும் என்றார். மருத்துவத்துறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை நாடு அடைந்துள்ளதுபற்றி குறிப்பிட்ட அமைச்சர், கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் 20 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை தொடங்கியிருப்பதாகவும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டுடன் அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதிசெய்துள்ளது என்றார்.

ஏழை மக்கள் மருந்துகளுக்காக அதிகம் செலவு செய்வதை குறைப்பதற்காகவே நாடு முழுவதும் 15ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மருந்தக மையங்கள் மூலம் மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன என்றும் அமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்தார். அதேபோல் உடல்பருமனை குறைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி, உணவில் 10% எண்ணெய் அளவை குறைப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

ஆயுஷ் மருத்துவ முறைகள் பல்வேறு நோய்களுக்கு மிகுந்த பயனளிப்பதாகவும், யோகா அதில் முக்கியப் பங்காற்றுவதாகவும் அண்மையில் நடந்த 11வது சர்வதேச யோகா தினத்தில் 3லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் யோகா செய்து உலக சாதனை நிகழ்த்தியதாகவும் அமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்தார். 2047-ம் ஆண்டு இந்தியா ஒரு வல்லரசாக அனைத்து துறைகளிலும் முன்னேறி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜெ அப்துல்கலாமின் கனவை நனவாக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கல்லூரி வளாகத்தில் அமைச்சர் டாக்டர் எல் முருகன், தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடுவோம் திட்டத்தின்கீழ் மரக்கன்று நட்டுவைத்தார். நிகழ்ச்சியில் இ எஸ் ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் (டீன்) டாக்டர் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், மருத்துவ கண்காணிப்பாளர் கே புஷ்பலதா மற்றும் மருத்துவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.