“ஹும்” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் – ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ஹும்’  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில், தயாரிப்பாளர்கள் ராஜா, கஸாலி, பத்திரிக்கையாளர்கள் டி எஸ் ஆர் சுபாஷ், செந்தில் வேல், ‘ஜீவா டுடே’ ஜீவ சகாப்தன், ‘ யூ டூ ப்ரூட்டஸ்’ தொழிலதிபர்கள் அப்பு பாலாஜி, கமல்ஹாசன், டி. சுரேஷ், இணை தயாரிப்பாளர்கள் சித்தர் திருதணிகாசலம், கௌரி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட, வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.********

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”  ஹும் என்பதை எப்படி சொல்வது என எனக்குத் தெரியவில்லை. ஹும் என்பதில் ஏகப்பட்ட மாடுலேஷன் இருக்கிறது. ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாடுலேஷனில் இந்த ஹும் இருக்கலாம். அப்படி ஒரு அழகான டைட்டில். இப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்படத்தின் தயாரிப்பாளரான உமாபதி மற்றும் என் நண்பர் சுபாஷ் ஆகியோரின் பேச்சில் ஏராளமான விசயங்கள் இருக்கும். நான் அவர்களை பேச சொல்லிவிட்டு, அவர்கள் பேசுவதை கேட்பேன். யார் எப்போது சினிமாவில் வருவார்கள் என்று சொல்லமுடியாது. ‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் தயாரிப்பாளர் நஞ்சப்பனுடன் அதுபோன்றதொரு அனுபவம் ஏற்பட்டது. அது வித்தியாசமாகவே இருந்தது. இதுபோன்ற தருணங்களில் என்னுடைய ஆசான் சொன்னது தான் நினைவுக்கு வரும்.  ‘நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான். அவரிடமிருந்து நீ கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விசயம் இருக்கும்’ என சொல்வார்.  அதனால்தான் நான் யாரையும் எளிதாக பார்க்க மாட்டேன் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விசயம் இருக்கும். இயக்குநர் கிருஷ்ணவேல் யாரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை என்றார் . சரி சுயம்புவாக சிலர் வருவார்கள் என எண்ணினேன். சினிமா மாறிவிட்டது. பாடலாசிரியர் விவேகாவிடம் இயக்குநரை பற்றி கேட்டபோது, ‘அவரை நான் இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன்’ என்றார்.  சினிமா ரொம்ப அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கிறது. தயாரிப்பாளராக இருக்கும் உமாபதி நிறைய விசய ஞானம் உள்ளவர் . அவர் படத்தை தயாரித்திருக்கிறார் என்றால் அதில் ஏதேனும் விசயம் இருக்கும். அவர் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி இருக்கிறார். அவருடன் ஆரம்ப காலத்தில் பழகிய நண்பரையும் தயாரிப்பாளராக்கியது அவர் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. விரைவில் அவருடைய இலட்சிய கனவான இயக்குநராகவும் ஆக வேண்டும் என வாழ்த்துகிறேன். இங்கு மேடையில் பேசிய யூ டூ ப்ரூட்டஸ் Minor, அவருக்கு யார் மேல் கோபமோ.. அவருடைய பேச்சில் என்னையும் கோர்த்து விட்டார். ” என்றார்.