ரஞ்சித் நடிக்கும் ‘இறுதி முயற்சி’ படத்தின் இசை வெளியீடு

வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில்  ரஞ்சித் நடிப்பில்  வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தில் ரஞ்சித், மேகாலீ, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு, குணா, சதீஷ், மோனிகா, நீலேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சூரிய காந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்திருக்கிறார். வடிவேல் – விமல் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை தாமு கவனித்திருக்கிறார். தற்கொலை குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி திகில் நிறைந்த படமாக உருவாகியுள்ளது. அஜய் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் அஜய் வழங்குகிறார்.******

அக்டோபர் மாதம் பத்தாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர் வி உதயகுமார் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் வெங்கட் ஜனா பேசுகையில், ” இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி.  இந்த கதைக்கு என்னுடைய நண்பரின் வாழ்வில் நடைபெற்ற சம்பவம் தான் உந்துவிசை. அதைத் தொடர்ந்து நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் தொழிலதிபர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. இந்த செய்தியை வாசித்தவுடன்.. என்னால் இயல்பாக கடந்து செல்ல முடியவில்லை. தொழிலதிபரான அவர் எப்படி இறந்திருப்பார்? இறப்பதற்கு முன் அவர் எந்த அளவிற்கு உணர்ச்சி வசப்பட்டிருப்பார்..? என பல கோணங்களில் எனக்குள் கேள்வி எழுந்தது. இவர்களை என்னுடைய படைப்பின் மூலம் ஏன் சிரஞ்சீவியாக்க கூடாது என்றும்… அதன் மூலம் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை சொல்ல முடியும் என்பதற்காகவும் இந்த படைப்பை உருவாக்கினேன்.  இந்தப் படத்திற்காக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள் என பலரும் தங்களது முழுமையான பங்களிப்பை வழங்கினார்கள். இதற்காக  அவர்களுக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தக் கதையில் ஒரு ஆத்மா இருக்கிறது. அதுதான் இப்படத்தின் நடித்த அனைவரையும் சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறது.  இந்தப் படத்தை செய்தியின் அடிப்படையில் எடுத்தால் அது டாக்குமென்டரி ஆகவே ஆகிவிடும். அதற்குள் சுவாரசியத்தை சேர்க்க வேண்டும் என்றால்… சைக்கலாஜிக்கல் திரில்லர் அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை தீர்மானித்தேன். முழு திரைக்கதையும் எழுதிய பிறகு ரஞ்சித்தை சந்தித்தேன். முதலில் மறுப்பு தெரிவித்த ரஞ்சித்.. சிறிய தயக்கத்திற்கு பிறகு முழு கதையையும் கேட்டார். அதன் பிறகு நடிக்க ஒப்புக்கொண்டார்.  இந்தப் படத்தை பார்த்த பிறகு ரஞ்சித்தை எவ்வளவு தவற விட்டிருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். அவருடைய திரை உலக பயணத்தில் இந்த திரைப்படம் மைல்கல் படைப்பாக இருக்கும்” என்றார்.