சசிகுமார் நடிக்கும் “ப்ரீடம்” திரைப்படம் ஜூலை 10ல் வெளியீடு

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில்,  சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம்  “ப்ரீடம்”.  இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில்  சசிக்குமார் பேசியதாவது:   இந்தப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரி நகைச்சுவையாக  இருக்காது, இது ஜெயிலில் படும் கஷ்டத்தைச் சொல்லும் படம், பார்வையாளர்களுக்கு  அதைத் தெளிவு படுத்தி விட வேண்டும். 1991 ல் நடந்த உண்மைக் கதை. நமக்குத் தெரியாத ஒரு கதை. இப்படி ஒரு படம் எடுத்ததற்குப் பாண்டியனுக்கு நன்றி. இயக்குநர் சத்ய சிவா வேலை எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெற்றி தோல்வி எல்லாம் ஒன்றுமில்லை, அவர் வேலை எனக்குப் பிடிக்கும். அவரது கதையைத் தான் பார்த்தேன்.  எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும்.” என்றார். இயக்குநர் நடிகர் சசிக்குமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல்  ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.******

தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் பேசியதாவது…  விஜய் கணபதி பிக்சர்ஸ் மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் பிடித்த படத்தைத் தருவோம். நாயகன் சசிகுமார் சார் இப்படத்திற்காகப் பார்த்துப் பார்த்து அத்தனை விஷயங்கள் செய்து தந்தார். இயக்குநர் சத்ய சிவா அருமையாக படத்தை எடுத்துள்ளார். லிஜோ மோல் அற்புதமாக நடித்துள்ளார் எல்லோரும் இந்த பாத்திரத்திற்கு அவரைத்தான் சொன்னார்கள். ஜிப்ரான் சார் தன் இசையால் சீட் நுனியில் உட்கார வைத்துவிட்டார். எங்களுடன் இணைந்த டிரெண்ட் மியூசிக் நிறுவனத்திற்கு நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் சத்ய சிவா பேசியதாவது: என்னை என் குடும்பம் ப்ரீடமாக விட்டதால் தான் இப்படத்தை எடுக்க முடிந்தது அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் எல்லோருமே தங்களால்  முடிந்த அளவு மிகக் கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஜிப்ரான் சார் பின்னணி இசையில் அவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. நாம் முடித்துக் கொடுக்கும் காட்சி, அவரிடம் போய் வரும் போது, முழுக்க வேறு பரிணாமத்தில் இருக்கும். ஒருவரை நல்லவராகக் காட்ட, சீன்கள் வைக்க வேண்டும் ஆனால் சசிக்குமார் சாரை  காட்டினாலே போதும். அதே மாதிரி அப்பாவி, ஏழ்மையானவர் எனும்போது, லிஜோ மோலை காட்டினாலே போதும், தனியாகக் காட்சி வைக்கத் தேவையில்லை. அவர் ஷீட்டில் இலங்கைத் தமிழைக் கற்றுக் கொண்டு பேசியுள்ளார் பெரிய உழைப்பைத் தந்துள்ளார். பாண்டியன் சார் முதல் படமாக என்ன படம் வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம், எங்களுக்குப் பெயர் வரும், ஆனால் பணம் வருமா? சினிமா சூழ்நிலை  இப்படி இருக்கும் போது, என்னை விட இந்தக்கதையில் இன்வால்வ் ஆகி, இப்படத்தைச் செய்துள்ளார். அவருக்காக இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். சசிக்குமார் சார் மிக நல்ல மனிதர், இதற்கு முன் அவருடன் ஒரு படம் செய்தேன் அது சரியாகப் போகவில்லை, உடனே அடுத்த படம், பலர் வேண்டாமென சொல்லியிருப்பார்கள், ஆனால் அவர் என்னை, இந்தக்கதையை நம்பினார், அவருக்கு நன்றி. இந்தப்படம் உங்களை நம்பி எடுத்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.