அமீரக இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீறா கருத்தரங்கம்

துபாய்: அமீரக இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீறா கருத்தரங்கம் காணொலி வாயிலாக 10.07.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இஸ்லாமிய இலக்கிய கழகம் மற்றும் திருநெல்வேலி, தேசிய கல்வி அறக்கட்டளை ஆகியவை சீறா கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இந்த கருத்தரங்குக்குக்கு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் அல்ஹாஜ் டாக்டர் சேமுமு முகமதலி தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் கொரோனா காலத்தில் இந்த கருத்தரங்குக்கு ஆர்வமுடன் தமிழகத்திலிருந்தும், வளைகுடா நாடுகளில் இருந்தும் பங்கேற்ற இலக்கிய ஆர்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இறை நம்பிக்கை கொள்வதன் மூலம் தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியும் என தெரிவித்தார். முன்னதாக இலக்கிய கழக ஆர்வலர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொருளாளர் அல்ஹாஜ் எஸ்.எஸ். ஷாஜஹான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சீறா தரும் தன்னம்பிக்கை எனும் தலைப்பில் குற்றாலம் ஶ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஹ. அல்தாஜ் பேகம் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் சீறாப்புராணத்தில் இருந்து பல்வேறு எடுத்துக்காட்டுகளை தெரிவித்து தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விவரித்தார். திருநெல்வேலி தேசிய கல்வி அறக்கட்டளை யின் நிறுவனரும், சர்வதேச மனிதாபிமான விருது பெற்றவருமான கல்லிடைக் குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் நன்றியுரை நிகழ்த்தினார். இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் அமீரகப் பிரதிநிதி முதுவை ஹிதாயத் நன்றியுறை நிகழ்த்தினார்.

இந்த கருத்தரங்கில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் அப்துஸ் சமது உள்ளிட்ட நிர்வாகிகள், ஓமன் நாட்டின் இலக்கிய கழக நிர்வாகி மஸ்கட் மு. பஷீர், அபுதாபி பிரதிநிதி ஆவை அன்சாரி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கில்லி சாய் ரஹ்மத்துல்லா தொழில்நுட்ப உதவியையும், அன்புடன் உஸ்மான் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டு பணியிலும் உதவினர். கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.