இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக மக்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

வரலாற்றில் அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சி எனப் புகழப்படும் மேதை லெனின் தலைமையில் நடந்தேறிய ருஷ்யப் புரட்சி, காலமாற்றத்தால் (காலண்டர் முறைப்படி) நவம்பர் புரட்சி என அழைக்கப்படுகிறது.“ஆஹா என்று எழுந்ததுபார் யுகப் புரட்சி” என்று மகாகவி பாரதி வரவேற்றதும், “உலகைக் குழுக்கிய புரட்சி” என அமெரிக்கா எழுத்தாளர் ஜான்ரீடு வர்ணித்ததும், “சமதர்ம புரட்சி” என தந்தை பெரியார் கூறியதும், “தொழிலாளர் புரட்சி” என சிங்காரவேலரும், திரு.வி.க. போன்றவர்களும் புகழ்ந்ததும் இந்தப் புரட்சிதான். “கிழக்கின் வெளிச்சம்” என நேருவும், “புதிய நாகரிகத்தின் தோற்றம்” என தாகூரும் பெருமைபட நவம்பர் புரட்சியை வரவேற்றனர். ரஷ்யப் புரட்சி ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலையை ஆதரித்து நின்றது. பாசிசத்தை வீழ்த்த 2 கோடிக்கும் அதிகமான மக்களை பலிகொடுத்து நீடித்த அமைதியை நிலைபெற செய்தது. நிதிமூலதன சக்திகளின் ஆதிக்கத்தில் அரசமைப்புகள் சிக்கிக் கொண்டிருப்பதும், வலதுசாரி, வகுப்புவாத சக்திகளின் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், அடக்கு முறைகள் அதிகரித்திருப்பதுமான சூழலில், சமத்துவ கருத்துக்களையும், அறிவியல் கண்ணோட்டத்தையும் பரப்புரை செய்யவும், நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயரிய நோக்கங்களை நிறைவேற்றவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மகத்தான மரபுகளை முன்னெடுத்துச் செல்லவும், நவம்பர் புரட்சி தினத்தில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் புரட்சிதின வாழ்த்துகள். அன்புள்ள (இரா.முத்தரசன்) மாநிலச் செயலாளர்