உயிரிழந்த மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளரின் உருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மலரஞ்சலி செலுத்தினர்

சென்னை பெருநகர காவல், நவீனக் கட்டுப்பாட்டறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் P.குருமூர்த்தி என்பவர் S-3 மீனம்பாக்கம் காவல் நிலைய சுற்றுக் காவல் வாகனத்தின் பொறுப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். உதவி ஆய்வாளர் P.குருமூர்த்தி கடந்த 26.6.2020 அன்று கொரோனா பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 13.7.2020 அன்று உயிரிழந்தார். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்
ஜ.கு.திரிபாதி,இ.கா.ப., மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் ,இ.கா.ப., 14.7.2020 அன்று மாலை S-3 மீனம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த உதவி ஆய்வாளர் P.குருமூர்த்தி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்ந்து சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் ஏ.அமல்ராஜ்,இ.கா.ப., (தலைமையிடம்), முனைவர் ஆர்.தினகரன், இ.கா.ப., (தெற்கு), ஏ.அருண்,இ.கா.ப., (வடக்கு), .பி.சி.தேன்மொழி,இ.கா.ப., (மத்திய குற்றப்பிரிவு), தெற்கு மண்டல இணை ஆணையாளர் ஏ.ஜி.பாபு,இ.கா.ப., துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இறந்த உதவி ஆய்வாளர் குருமூர்த்தி 25.10.1984 அன்று தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிக்கு சேர்ந்து, 10.7.2016 அன்று உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி, அலர்மேல்மங்கை என்ற மகள் மற்றும் தினேஷ்குமார் என்ற மகன் உள்ளனர்.