ஊரடங்கு அமுலில் இருப்பதால் ஒரு வீட்டிற்கு ஒருமாத செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் – வ. கௌதமன்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரு மாதம் முழுவதும் ஊரடங்கு அமுல் படுத்தி ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழ் பேரரசு கட்சியின் பொது செயலாளளர் கௌதமன் தெரிவித்துள்ளார். சென்னை 10.07.2020 அன்று பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் முன்னதாக 2019 ஆண்டு தொடங்க பட்ட தமிழ் பேரரசு கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்து அங்கீகரித்துள்ளதாக கூறினார்.மேலும் தமிழகத்தில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது, கொரோனா வை விட பல அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையில் நம்பகத்தன்மை இல்லை. ஒடிசா மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்தியது போல் தமிழகம் அனைத்து தனியார் மருத்துவமனை கையகப்படுத்தி அனைத்து மருத்துவமனையிலும் கொரோனா பரிசோதனையும் மருத்துவமும் இலவசமாக செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் குறைந்த பட்சம் அனைத்து தாலுக்காகளிலும் ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர் உட்பட 100 படுக்கை வசதிகள் செய்யவேண்டும்… கொரோனா காலத்தில மத்திய அரசு அறிவித்த நிதிகளை தமிழகத்திற்கு ஏன் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் வீட்டு வரி,சொத்து வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் ஜனவரி மாதம் வரைக்கும் ரத்து செய்ய வேண்டுமென்றும் இந்த ஆண்டுக்கான பள்ளி கல்லூரி கட்டணங்களை அரசே கட்ட வேண்டும் என கூறிய அவர், கொரோனாவில் இருந்து மக்கள் உயிரை காக்க ஒரு மாதம் முழுவதும் ஊரடங்கு அமுல் படுத்த வேண்டும், இந்த ஒரு மாதத்திற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து வீட்டிற்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்..

ஆங்கில மருத்துவத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உலகை காக்கும் சித்த மருத்துவத்துக்கும் கொடுக்க வேண்டும். கொரோனாவிடமிருத்து கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்றால் முதல்வர் பதவியில் இன்னும் ஏன் நீடிக்க வேண்டுமென்றும் கேள்வி எழுப்பினார். சோதனை செய்யும் “கிட்”டிலிருந்து நோயாளிகள் படுக்கும் “பெட்” வரை ஊழல் நடப்பதை சகித்துக்கொள்ள முடியவில்லை. லாக்கப் மரணங்களில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது, தமிழகத்தில் மட்டும் கடந்து ஒன்றரை ஆண்டுகளில் பதினோரு மரணங்கள் நடந்துள்ளது. “லாக்கப்” கொலைகளுக்கு சட்டத்தில் இதுவரை தண்டனை இல்லை என்கிறார்கள் நீதித்துறை வல்லுநர்கள். இதுவே பெரும் வன்முறை.

மத ரீதியான ஆதரவில் சாத்தான்குளம் சாத்தான்கள் தப்பிவிடக்கூடாது. ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட பதிமூன்று உயிர்களுக்கான சிபிஐ விசாரணை துரும்பளவுக்குக்கூட நகரவில்லை. சட்டத்தை கையில் வைத்திருப்பவர்கள் கொலை செய்தால் தூக்கு தண்டனை மட்டுமே தீர்வு. உடனடியாக இதற்கென தனி சட்டமும் தனி நீதி மன்றமும் தமிழக அரசு உருவாக்க வேண்டும். புதுக்கோட்டையில் ஜெயபிரியா பாலியல் வன்கொடுமை வழக்கில் உடனடியாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

பல்லில்லாத “போக்சோ” சட்டத்தால் பலனில்லை. பொள்ளாச்சி பிசாசுகளை தப்ப விட்டது போல் இனி குழந்தைகளை சிதைப்பவர்கள் தப்பக்கூடாது. பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கும் கன்னியாகுமரி குற்றவாளிக்கும் அரசியல்வாதிகளோடு தொடர்பு உள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு புலனாய்வு முடித்த முப்பது நாட்களுக்குள் தூக்கிலிடும் சட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்