ஒன்பது வயதில் உலக சாதனை புரிந்த இரட்டையர்கள்

இந்தியாவில் முதல்முறையாக 7 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்ற இரட்டையர்கள் என்ற சாதனையைச் செய்துள்ளனர் காரைக்காலைச் சேர்ந்த ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணி.

காரத்தே வகுப்பு, பள்ளி வகுப்பு என ரொம்பவே பிஸியாக இருந்த கராத்தே கிட்ஸை விடுமுறை நாளில் சந்தித்தோம். ‘‘என்னோட கணவருக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்பப் பிடிக்கும். அதனால, எங்க பசங்களுக்கும் ஏதாவது ஒரு விளையாட்டைக் கத்துக்கொடுக்க நினைச்சோம். எங்க இரட்டைக் குழந்தைகளில் ஒன்று ஆண் இன்னொன்று பெண். இருவருமே சின்ன வயசிலிருந்து துருதுருன்னு இருப்பாங்க. முதல்ல நீச்சல் பயிற்சியில சேர்த்துவிட்டோம். அது அவங்களுக்கு செட்டாகலை. அதனால கராத்தே கிளாஸ்ல சேர்த்துவிட்டோம். 3 வயசுலிருந்தே கராத்தே கிளாசுக்குப் போறாங்க. கராத்தேவை நல்லா கத்துகிட்டு இன்னைக்கு இந்தியாவுல குறைந்த வயதில் பிளாக் பெல்ட் வாங்கிப் பெருமை சேர்த்திருக்காங்க. இதைப் பார்க்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு, கராத்தேயுடன் ஸ்ரீவிசாகன் செஸ் கிளாசுக்கும் போறான். அதுபோல் ஸ்ரீஹரிணி நல்லா ஓவியம் வரைவாள். அத்துடன் கட்டுரை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்’’ என்கிறார் சாதனை இரட்டையர்களின் அம்மா பிரியா.

‘‘குழந்தைகளின் கராத்தே பயிற்சிக்கான பொறுப்பு என்னுடையது. அவர்களின் பள்ளிப் படிப்புக்கான பொறுப்பு என் மனைவியுடையதுன்னு பிரிச்சிக்கிட்டோம். தினமும் அதிகாலை 5.00 மணிக்கு எழுந்திருச்சி, 5.30 மணிக்கு கராத்தே கிளாஸுக்குப் போயிடுவாங்க. இரண்டு மணிநேரப் பயிற்சிக்குப்பின் வீடு திரும்பியவுடன் ஸ்கூலுக்குப் போறதுக்கான எல்லா ஏற்பாடும் செஞ்சி வெச்சுருப்போம். ரெண்டு பேருமே ரொம்ப நல்லா படிக்குறாங்க. படிப்புடன், ஸ்கூலில் எந்தப் போட்டி நடந்தாலும் கலந்துகிட்டுப் பரிசு வாங்கிடுவாங்க. கராத்தே போட்டிக்கு வெளியூருக்குப் போகிறபோது வயசு மற்றும் எடைக்கு ஏற்ற மாதிரிதான் போட்டியாளர்களும் இருப்பாங்க. சில நேரத்துல இவங்களைவிட வயசுல பெரியவங்க போட்டியாளரா கலந்துக் கிட்டாலும் அசராமப் போட்டியிட்டு ஜெயிப்பாங்க. இந்தப் புள்ளைங்க ரெண்டுபேரும் ஒலிம்பிக் போட்டியில கலந்துகிட்டு இந்தியாவுக்குத் தங்க மெடல் வாங்கித் தரணும் என்பதுதான் எங்களோட ஒரே லட்சியம்’’ என்றார் அப்பா முருகானந்தம்.

குழந்தைகளின் கராத்தே மாஸ்டர் குமாரிடம் பேசியபோது, ‘‘ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி இருவரும் நான்கு வருடமா என்கிட்ட கராத்தே கத்துக்குறாங்க. எப்போதும் சரியான நேரத்துக்கு வந்துடுவாங்க. இந்த வயசுல பிளாக் பெல்ட் வாங்குவது உண்மையிலேயே பெரிய விஷயம். மலேசியாவில் நடந்த போட்டியில் இருவரும் ஜெயிச்சிருக்காங்க. ’என்றார். தினமும் ஸ்ரீவிசாகனும் ஸ்ரீஹரிணியும் யோகா பயிற்சியும் செய்கிறார்கள். ஆக்ஷன் சினிமா பார்ப்பதிலும் ஆர்வம். இந்தச் சின்ன வயதில் சாதனை புரிந்த உங்களின் வருங்காலக் கனவுதான் என்ன? என்று கேட்டோம்.

‘‘ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்கணும், ஐ.ஏ.எஸ் படிச்சி கலெக்டராகணும்.’’ என்றான் ஸ்ரீவிசாகன்.

‘‘நானும் ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்கணும், எங்கள் தாத்தா இதய நோயால திடீர்ன்னு செத்துட்டாங்க. அதனால டாக்டருக்குப் படிச்சி, இதயநோய் நிபுணர் ஆகி எல்லோரையும் காப்பாத்தணும்’’ என்றார் ஸ்ரீஹரிணி.

8 வயதுக்குட்பட்டோருக்கான கராத்தேவில் சாதனை படைக்க துடிக்கும் இரட்டையர்கள்