ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மௌனம் காப்பது ஏன்? இரா.முத்தரசன் கேள்வி

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது வாழ்க்கை அனுபவங்களில் மூத்தோர் சொன்னது. ஆனால் அறிவியல் வளர்ச்சி தகவல் தொடர்பு துறையில் வியக்கத் தக்க மாற்றங்களை கண்டிருக்கும், இன்றைய நடப்பு காலத்தில் இணைய வலை தளத்தில் ‘முகநூல்’ என்ற புதிய தகவல் பரிமாற்ற செயலிகள் மனித சமுதாயத்திற்கு கிடைத்துள்ளது. இந்தத் தளத்திலும் வாட்ஸ் ஆப், டுவிட்டர் போன்ற இதர செயலிகளிலும் விரிவான கருத்து பரிமாற்றத்துக்கான பரந்துபட்ட தளங்கள் உருவாகியிருக்கின்றன. இந்த தளங்களைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான, அறிவை செறிவூட்டத் தக்க விவாதங்கள் நடத்துவது ஜனநாயகமாகும். இதன் அல்லனவைகளை தள்ளியும், நல்லவைகளை சேர்த்தும் சமூக இயக்கம் முன்னேறி செல்ல வழிவகை கிடைக்கும். ஆனால் இந்த நவீன தகவல் தொடர்பு சாதனங்களில், அறிவியல் கருத்துக்களுக்கும், பகுத்தறிவு சிந்தனைக்கும், மனிதநேய நடைமுறைக்கும் எதிரான பழமைவாதிகள் ஊடுருவி வெறுப்பு அரசியலை விதைத்து வருவதுடன் மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி கொள்கை நிலையில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் மீது ஆபாச குப்பைகளை கொட்டி அவதூறு பரப்பும் மேடைகளாக சமூக ஊடங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய, சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்ட வேண்டி அரசு நிர்வாக அமைப்புகள் ஆளும் தரப்பினர் அழுத்தங்களுக்கும் ஆளாகி, செயலற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றன. இது போகிற போக்கில் அல்லது விருப்பு வெறுப்பில் சொல்லப்படுகிற கருத்தல்ல. அண்மையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகத்தின் படத்தை பதிவிட்டு, அதனை ‘விபச்சார விடுதி‘ என்று அடையாளப்படுத்திய முகநூல் பதிவும், இந்த ஆபாசச் செய்தியின் பின்னூட்டப் பதிவுகளில் ஒரு பெண் சமூக செயல்பாட்டாளர் அவரது மகனுடன் இருக்கும் நிழற்படத்தையும் பதிவிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றவரும், விடுதலை போராட்ட வீரருமான மூத்த தலைவர் இரா நல்லகண்ணு அவர்களை இழிவு படுத்தி சித்தரிக்கப்பட்ட படத்தை பதிவிட்டு, ஆபாச அவதூறு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஆபாச, அவதூறு செய்திகளை பரப்புரை செய்து வரும் சமூக விரோதிகளை கண்டித்தும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் முறைப்படி புகார் மனுக்களை கொடுத்திருக் கிறது.  இந்த செய்தி அறிந்த ஜனநாயக சக்திகள் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டு, ஆபாச அவதூறு பரப்பி வருவோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் “நாளை ஆளுங் கட்சி உள்ளிட்ட எந்த கட்சிக்கும் இது போன்று நடந்துவிடக் கூடும்” என எச்சரிக்கை செய்து ள்ளார். இதுபோல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய தேசிய காங்கிரஸ், திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டணம் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. கடந்த 22.07.2020 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டன. இவைகள் அனைத்தும் ஏடுகளில், மின்னணு ஊடகங்களில் விரிவாக வெளியாகியுள்ளன. மத்தியில் ஆளும் பாஜகவும், மாநில அதிகாரத்தில் ஆட்சி நடத்தும் அஇஅதிமுக ஆகிய இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் வாய்மூடி கிடக்கின்றன. இதில் பாஜகவின் மௌனத்தை புரிந்து கொள்ள முடியும். அது சமூக ஊடகங்களில் ஆபாச அவதூறு பரப்பி வரும் கூட்டத்தின் அரசியல் முகம். ஆனால் நாடாளுமன்ற நடைமுறைகளில் ஜனநாயக புரட்சி நடத்தி வெற்றி கண்ட பேரறிஞர் அண்ணா பெயரை கட்சியின் பெயராகக் கொண்டுள்ள அஇஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஏன் வாய் திறக்க வில்லை : கண்டன அறிக்கை வெளியிட முடியவில்லை. முதலமைச்சர், துணை முதலமைச்சர் என எவரும் அரசின் சார்பில் சமூக ஊடகங்களில் பரப்புரை செய்து வரும் சமூக விரோதிகளை எச்சரிக்கை முடியாமல் போனது ஏன்?

இந்த வினாக்களுக்கு விடை கிடக்காமல் நீடிக்கும் மௌனம் தான் சமூக விரோத சக்திகளுக்கு ‘பச்சைக் கொடி’ காட்டும் செயலாகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மதச்சார் பற்ற முற்போக்கு ஜனநாயக சக்திகள், சமூநீதி, சமத்துவ கருத்துடையோர், சமூக நல்லிணக் கம் பேணுவோர், மனித உரிமை சமூக செயல்பாட்டாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மக்களின் பேரெழுச்சி ஏற்படுத்துவது உடனடித் தேவையாகிறது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்