‘கள்ளன்’ படத்தின் தலைப்பு விவகாரம்… தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கள்ளன்’. இதில் இயக்குனர் கரு.பழனியப்பன், நமோ. நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா,மாயா உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட ஜாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், படத்தின் தலைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு ஊர்களிலிருந்து வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஒரு பெண் உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில் , ‘ கள்ளன்’ படத்திற்கு சென்ஸார் கொடுக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.  இதற்கிடையில் ‘கள்ளன்’ படத்தைப் பார்த்த சென்ஸார் போர்டு, படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் இருக்கும் தொடர்பை வைத்து U/A சான்றிதழ் கொடுக்க பரிந்துரை செய்திருக்கிறது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேற்குறிப்பிட்ட பெண் தொடர்ந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று, வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து உடனடியாக படத்தை வெளியீடு செய்யும் முனைப்பில் இருக்கிறார் தயாரிப்பாளர் மதியழகன்.

மக்கள்தொடர்பு: டி.ஒன்.