கோவிட்-19 காரணமாக தற்போது நிலவும் சூழலை முன்னிட்டு, ஜூலை 1 முதல் 15ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை சிபிஎஸ்இ ரத்து செய்துள்ளது.

புதுதில்லி, ஜூன் 26, 2020. பல மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட வேண்டுகோள்களை முன்னிட்டும், கோவிட்-19 காரணமாக தற்போது நிலவும் சூழல்களைக் கருத்தில் கொண்டும், ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்புக் களுக்கான தேர்வுகளை ரத்து செய்ய மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) முடிவு செய்துள்ளது. தேர்வை ரத்து செய்யும் சிபிஎஸ்இ முடிவுக்கும் மற்றும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் இறுதித் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்யும் திட்டத்துக்கும், உச்சநீதிமன்றம் இன்று சம்மதம் தெரிவித்தது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேர்வுகளை நடத்த வேண்டாம் என்ற சிபிஎஸ்இ முடிவை ஏற்றுக்கொண்டதற்கும், மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்ததற்காகவும், உச்சநீதிமன்றத்துக்கு தனது நன்றியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிப்பதற்கு, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளில் மாணவர்களின் செயல்பாடு மதிப்பீடு, சிபிஎஸ்இ குழு பரிந்துரை அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என அவர் கூறினார். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வு களுக்கான பாடங்களுக்கு, சாதகமான சூழல் ஏற்பட்டதும் விருப்பத் தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தும் என திரு. நிஷாங்க் தெரிவித்தார்.

மதிப்பீடு திட்டத்தின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவர்கள், தங்கள் மதிப்பெண்களை அதிகரிக்க விரும்பினால், இந்த விருப்பத் தேர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேலும் தேர்வுகள் நடத்தப்படாது என்றும், சிபிஎஸ்இ மதிப்பீடு, திட்ட அடிப்படையில் அறிவிக்கப்படும் முடிவுகள் இறுதி யானதாகக் கருதப்படும் என அவர் தெரிவித்தார். மேலே கூறப்பட்ட மதிப்பீடு திட்டத்தின் அடிப்படையிலான தேர்வு முடிவுகள் ஜூலை 15, 2020ஆம் தேதி அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறினார். இதன் மூலம், மாணவர்கள் உயர் கல்வி மையங்களில் விண்ணப்பித்து சேர முடியும். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆரோக்கியம் முக்கியம் என்பதால், இத்திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் நாங்கள் தெரிவித்தோம் என அவர் கூறினார்.