சர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறிக்கை

11.08.2020, செவ்வாய்க்கிழமை: உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்தமை யினாலேயே தமிழ் மக்கள் தம் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கேட்டு நிற்கின்றார்கள். சிறீலங்கா அரச படைகளால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் பற்றிய பல வழக்குகளில் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழ் மக்களுக்கு நியாயமான பரிகார நீதி கிடைக்கவில்லை என்பதாலேயே, தமிழ் மக்கள் தாங்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகிறோம். சித்திரவதைகளுக்கும், வன்முறை களுக்கும் உள்ளாக்கப் படுகிறோம். அதற்கு தாராளமாக இடம் கொடுக்கும் சிறீலங்காவின் ஒற்றையாட்சி அதிகாரக் கட்டமைப்புக்குள் இதற்கு மேலும் சகித்துக் கொண்டு வாழ முடியாது. ஒரு தேசமாக பிரிந்து போய் தம்மை பாதுகாத்துக் கொள்ள சர்வஜன வாக்கெடுப்பையும் ஐ.நாவில் வலியுறுத்து கிறார்கள்.

கடந்த காலங்களில், இலங்கைத்தீவில் முக்கிய வழக்குகளின் நீதிமன்றத் தீர்ப்புகளை இறுதி நேரத்தில் வரும் தொலைபேசி அழைப்புகள் மாற்றி அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உண்டு. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது ஆட்சிக் காலத்தில் நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்கு உட்படுத்தும், அதைச் சந்தேகிக்கும் வகையில் இருட்டு மூலைகளில் நடந்தேறிய இவ்வாறான சூட்சும விசயங்களை பொதுத்தளத்தில் பேசு பொருளாக்கியிருந்தார். அவர் கடுமையாக குற்றம் சுமத்திய ராஜபக்ச தரப்பினரே இப்போது மறுபடியும் இலங்கைத் தீவில் ஆட்சிபீடம் ஏறி உள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது. உள்நாட்டு நீதிபரிபாலனக் கட்ட மைப்பை போன்றே சிறீலங்கா அரசால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், விசாரணைக் குழுக்கள் உள்ளிட்ட இதர அரச கட்டமைப்புகளிலும் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தே இருக்கிறார்கள்.

கடந்த 2015 நாடாளுமன்றத் தேர்தலைப் போன்றே இம்முறை 2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆளும் அரச அதிகார மையம், சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கான நெருக்கடிகள் தலையீடுகளிலிருந்து தம்மைப் பாதுகாத்து உள்நாட்டுப் பொறிமுறைகளை செயற்படுத்து வதற்கு, வழக்குத் தொடுநர்களாகிய பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பில் இருந்தே தமக்கு ஒத்தி சைந்து போகக் கூடியவர்களுக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை வழங்குவதற்காக யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தேர்தல் முடிவுகள் மாற்றி அமைக்கப்பட்டதாக மக்கள் அச்சமும் சந்தேகமும் கொண்டுள்ளனர்.

வெற்றி வாய்ப்பு தொங்குப் பொறி நிலையில் இருந்த ஒரு வேட்பாளருக்கு சார்பாக, அரச இயந்திரத்தின் ஏவல் படையான பொலிஸார் அதே கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு பெண் வேட்பாளரின் ஆதரவாளர்களை மிருகத்தனமாக தாக்கியமை, அரச நிகழ்ச்சி நிரலுக்கு இசைந்து போகக் கூடியவரும் தமக்கு வேண்டப்பட்டவருமாகிய அந்த வேட்பாளரின் வருகைக்காக காத்திருந்து வாக்கு எண்ணும் நிலையத்தின் முடிவுகளை நீண்ட நேரம் தாமதித்து இழுத்தடித் தமை, கள்ள மௌனம் மற்றும் செயற்கைத்தனமாக அமைதி இன்மையை அங்கு ஏற்படுத்தி வலிந்து கலவரத்தை உண்டு பண்ணியமை எல்லாமே, இது உண்மையாகவே சனநாயக முறைப்படி நடந்த தேர்தல் தானா? என்ற பலத்த சந்தேகத்தை கிளப்புகிறது.

ஆகவே தான் 2020 நாடாளுமன்றத் தேர்தல் தமிழ் மக்களுக்கு பன்னாட்டு கண்காணிப்பாளர் களின் பங்களிப்பின் அவசியத்தையும் தேவையையும் உணர்த்தி நிற்கிறது. சிறீலங்கா அரச அதிகார மையம் தீர்மானம் எடுக்கும் தமிழ் மக்களின் வாழ்வுரிமை சார்ந்த விவகாரங்களில் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தமிழ் மக்கள் உண்மை மற்றும் நீதியைக் கண்டறியவும் சர்வதேச தலையீடுகள் அத்தியாவசியமானது என்றும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நம்புவதோடு இதனை மக்கள் மன்றத்திலும் பிரேரிக்கிறது. என்று வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் அ,ஈழம் சேகுவேரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.