சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் நூற்றுக்கணக்கானோர் கல்வி பாதிப்பு – கள ஆய்வில் அதிர்ச்சித் தகவல்- சி.சே.ராசன்

நமது மக்கள் தொகையில் 5 சதவிகிதத்தினர் பழங்குடியினர். பொதுவாகவே அவர்கள், பரிதாபத் துக்குரிய நிலையில் இருப்பவர்கள். இந்த கொரோனா நேரத்தில் அவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் பழங்குடியினர் வசிக்கும் மலைகிராமப் பகுதிகளில் சமம் குடிமக்கள் இயக்கம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிர்ச்சித் தகவல்கள் தெரிய வந்தன. இதுகுறித்து விரிவாகப் பேசினார் சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.சே. இராசன். அவர் கூறுகையில்,

பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் அரசானது மக்களை அலைகழித்து வரும் கொடுமை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல், பழனி, திண்டுக்கல் மேற்கு தாலுகாவில் வாழுகின்ற பளியர் பழங்குடி மக்கள் சாதி சான்றிதழ் கிடைக்காமல் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு அலைந்துக் கொண்டே இருக்கின்றனர். கொடைக்கானல் பழனி மலைப்பகுதியில் வாழும் பளியர் பழங்குடி மக்கள் மத்தியில் ஆய்வு செய்தப்போது கொடைக்கானல் தாலுகாவில் உள்ள கடமன்ராவ், சவரிக்காடு, கருவேலம் பட்டி, செம்பராங் குளம், பூதமலை மற்றும் பழனி தாலுகாவில் குதிரையாறு அணை, சண்முகம் பாறை, புளியம் பட்டி, காந்தி நகர், கத்தாலம் பாறை மற்றும் திண்டுக்கல் மேற்கு தாலுகாவில் குழவிக்கரை ஆகிய பழங்குடி கிராமங்களை சார்ந்த மக்களும் சாதிச் சான்றிதழ் கோரி கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து அலைந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இந்தப்பகுதியில் மட்டும் கடந்த ஓராண் டில் மட்டும் 546 பேர் சாதி சான்றிதழ் கேட்டு மனு அளித்திருந்தனர். இதில் 208 பேர் பள்ளியில் படிக்கும் குழந்தைகள்.

சாதிச்சான்றிதழ் இல்லாததால் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பள்ளி உதவி தொகை பெற முடியவில்லை. மேல்படிப்புக்கு செல்ல முடியவில்லை. பழக்குடி மக்களுக்கான அரசு விடுதி களிகளில் தங்கி படிக்க முடியவில்லை என வேதனையை வெளிப்படுத்தினர். சாதிச் சான்றிதழ் கிடைக்காததால், பழங்குடியினர் நலவாரிய அட்டை பெற முடியவில்லை. நலவாரிய பலன்கள் எதையும் அடைய முடியவில்லை. மேலும், சான்றிதழ் இல்லாததினால் தாட்கோ மூலம் கடன் கள் மற்றும் பழங்குடி மக்கள் நலனிற்கான எந்த அரசு திட்டங்களையும் சலுகைகளையும் பெற முடியவில்லை. பொதுவாக கிராமங்களில் ஓராசிரியர் பள்ளி என 5ஆம் வகுப்பு வரை உள்ளது. அதற்கு மேல் படிக்க தொலைவாக செல்ல வேண்டியுள்ளது.மேல்படிப்பு படிப்பதற்காக கொடைக் கானல், பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் போன்ற இடங்களுக்கு வருகின்றனர். சாதி சான்றி தழ் கிடைக்காததினால் அரசு விடுதிகளில் தங்கி படிக்க முடியவில்லை. மேல்நிலை படிப்பு முடித்து ஒரு சிலர் அப்பகுதி சமூக அமைப்புகளின் துணையுடன் ஐ.டிஐ ,பாலிடெக்னிக்கில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பிருந்தும் அவர்களுக்கும் சாதி சான்றிதழ் இல்லாததினால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.

கருவேலம் பட்டி, காந்தி நகர் போன்ற பல்வேறு கிராமங்கள் மின்சார வசதி இல்லாத கிராமங்கள். அதிகமான வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி கிடையாது. அப்படியிருக்கும் போது பள்ளிகள் திறக்காத இக் கொரோனா காலக்கட்டத்தில் அரசு அறிவித்துள்ளப்படி தொலைக்காட்சி மூலம் எப்படி கல்வி கற்க முடியும்? பழங்குடி மக்களிடம் சேமிப்பு பழக்கம் இல்லை.ஆனால் உழைத்துக் கொண்டே இருக்கின்றனர்.. மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் இப்போது கிராமங்களில் நுழைந்து மக்களை கடன்காரர்களாக்கி வருகின்றனர். அரசு பழங்குடி மக்களின் கலை, பண்பாட் டை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இப்போது கொரோனா காலக் கட்டத்தில் ஹெல்த் நர்ச் மட்டுமே கிராமங்களுக்கு வருகின்றனர். ஆம்புலன்சும் வருவதில்லை. இப்போது மழைக்காலம் பல்வேறு தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் சூழலில் உள்ளன. எந்த புகார் கொடுத் தாலும் எங்கள் குறைகளை அலட்சியமாகவே பார்க்கின்றனர் என்ற ஆதங்கம் மக்களிடம் இருக்கிறது. பழங்குடி வாழ்வாதார மேம்பாட்டிற்காக அவர்களுடைய பண்பாடு மரபு அழிந்து விடாமல் பாதுகாக்கும் செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் காடுகள் குறித்த சட்டங்கள் தற்போது இவர்களில் பல இனத்தவரை காடுகளுக்குள் வசிக்க விடாமல் விரட்டி வருகின்றது. கல்வி அதிகம் இல்லாத, தொழில் நுட்பங்களுடன் வாழ்வை இணைத்து கொள்ளாத இவர்கள் இன்னும் காடுகள் சார்ந்த இயற்கை பொருட்களை விற்பனை செய்வதிலும், சில உடல் ரீதியான உழைப்பினாலும் வாழ்ந்து வரும் இவர்களின் நலம் குறித்த அரசின் செயல்பாடுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. பழங்குடி மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் அவர்களை அலைக்கழித்து அவர்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் பட வேண்டியது அவசியம். ஒருசில அதிகாரிகளாவது தண்டிக்கப்பட்டால் தான் அரசுதிட்டங்கள் முறையாக செயலுக்கு வரும் என்றார் சி.சே.ராசன்