சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்தை சேதம் செய்தவர்களின் சொத்துகள் பறிமுதல் – லக்னோ நிர்வாகம் தொடங்கியது

உத்தரப் பிரதேசம் லக்னோ நகரில், சிஏஏ சட்டத்துக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுச் சொத்துகளை சேதம் செய்தவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்தப் பறிமுதல் பணியை ஏதும் செய்யாமல் இருந்த லக்னோ நிர்வாகம், அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் சொத்துகள் பறிமுதல் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக ஹசன்கஞ்ச் பகுயில் ஒரு ஜவுளிக்கடை மற்றும் சிற்றுண்டிக் கடையை நகர நிர்வாகம் பறிமுதல் செய்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த என்ஆர்சி மற்றும் சிஏஏ சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அப்போது உத்தரப் பிரதேசம் லக்னோவில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி நடந்த போராட்டத்தின்போது லக்னோ நகரில் வன்முறை ஏற்பட்டு ஏராளமான பொதுச் சொத்துகளுக்குப் போராட்டக்காரர்கள் சேதம் விளைவித்தனர். பேருந்துகளுக்குத் தீவைத்தும், போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கியும், சாலைத் தடுப்புகளை உடைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் உரிய இழப்பீட்டை உ.பி. அரசு வாங்கி வருகிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த 3 மாதங்களாக லக்னோ நகரில் இழப்பீடு பெறும் பணி நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தாசில்தார் சாம்பு ஸரன் சிங் கூறுகையில், ”சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு தீங்கு விளைவித்த 54பேர் மீது 4 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் பணியும், அபராதம் தராவிட்டால் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் பணியும் நடக்கிறது. ரூ.1.55 கோடி மதிப்புள்ள இழப்பீட்டைப் பெற 54 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்

ஹஸன்கஞ்ச் பகுதியில் நேற்று ஒரு ஜவுளிக் கடையையும், சிற்றுண்டிக் கடையையும் பறிமுதல் செய்தோம். தொடர்ந்து இந்தப்பணி நடக்கும்” எனத் தெரிவித்தார். ஹஸன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த மகானீர் சவுத்ரி என்பவர் சிஏஏ போராட்டத்தில் பங்கேற்று அரசு சொத்துகளைச் சேதப்படுத்தியதால், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரின் ஜவுளிக்கடை நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. காதரா பகுதியில் 13 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.21.76 லட்சம் பெற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பரிவர்தன் சவுக் பகுதியில் 24 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.69.65 லட்சம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாக்கூர்கஞ்ச் பகுதியில் 10 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ரூ.47.85 லட்சம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காசிர்பாக் பகுதியில் 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.