சிறுபாசன கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் குடிமராமத்து திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் 17.8.2019 நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் கிராம அளவில் உள்ள ஊரணிகளில் குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிலத்தடி நீர் அளவினை மேம்படுத்தும் வகையிலும் மழை நீரை வீணாக்காமல் சேமிக்க ஏதுவாகவும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து திட்டப் பணிகளின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 பொதுப் பணித்துறை கண்மாய்களில் அந்தந்த விவசாய பாசனதாரர் நலச்சங்கங்களின் மூலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ஊராட்சி அளவில் உள்ள சிறு பாசன கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 1112 சிறுபாசன கண்மாய்களும் 3464 ஊரணிகளும் உள்ளன. இவற்றில் குடிமராமத்து திட்டப் பணிகள் மேற்கொள்வதற்காக 224 சிறுபாசன கண்மாய்களும் 988 ஊரணிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு சிறு பாசன கண்மாய்க்கும் தலா ரூ.5 இலட்சம் மதிப்பிலும்
ஊரணிகள் தலா 1 இலட்சம் மதிப்பிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு 21.8 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் நெல்மடூர் ஊராட்சியிலுள்ள ஆவுடையாச்சி ஊரணி முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொசுக்குடிப்பட்டி ஊராட்சியிலுள்ள சத்திர ஊரணி ஆகிய ஊரணிகளில் குடிமராமத்து திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

பணிகளை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசுகையில். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக கிராம அளவில் உள்ள சிறு பாசன கண்மாய்கள் மற்றும் ஊரணிகளிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இப்பணிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் முன்வந்து புனரமைப்பு பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சிறு பாசன கண்மாய்களில் மற்றும் ஊரணிகளில் முறையே தூர்வாரி சீமை கருவேல மரங்களை அகற்றி கரைகளை பலப்படுத்துவதோடு அதிக அளவில் பயன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ்கனி பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.சதன்பிரபாகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.த.கெட்சி லீமா அமலினி மிக்கேல்பட்டிணம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் திரு.எம்.ஏ.முனியசாமி ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி.சிவகாமி ஊராட்சிகளின் உதவி இயக்குநர் திரு.வீ.கேசவதாசன் உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டாட்சியர்கள் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.