சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் குறித்தும், இச்செயலியின் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் பயனாக பெண்கள் மற்றும் மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து, காவல்துறையின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 10.12.2019 அன்று மயிலாப்பூர், காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரியில் நடைபெற்ற காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் காவல் ஆணையாளர் அவர்கள் இச்செயலியின் பயன் மற்றும் பதிவிறக்கம் செய்வது குறித்த விழிப் புணர்வு பிரசுரங்களை (Awareness Pamphlets) மாணவியர்களுக்கு வழங்கி, தங்களது குடும்பத்தினருக்கும் இச்செயலியின் பயன் குறித்து எடுத்துரைக்கும்படி
அறிவுறுத்தினார். அதன்படி கல்லூரி மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா,இ.கா.ப., கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.சுதாகர், இ.கா.ப., மயிலாப்பூர் துணை ஆணையாளர் திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய் , இ.கா.ப, காவல் அதிகாரிகள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் சுமார் 600 மாணவிகள் கலந்து கொண்டனர்.