சென்னை விமான நிலையத்தில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள்

சாதகமான சுற்றுச் சூழலை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் சென்னை விமான நிலைய வளாகத்தில் நடப்பட்டிருந்த 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான 25 மரங்கள் வேரோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, கடந்த ஒரு வாரத்தில் மறுநடவு செய்யப் பட்டுள்ளன. இந்த மரங்கள் பல்வேறு இனங்கள் மற்றும் சுற்றளவைக் கொண்ட தாகும். பழைய விமான நிலையம், விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதால், அங்கிருந்த மரங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு, டி.4 முனையத்திற்கு முன்பாக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மறுநடவு செய்யப்பட்டுள்ளன. மறுநடவு செய்யப்பட்ட மரங்களில் அத்திமரம், அரசமரம் ஆகியவையும் அடங்கும். இந்த மரங்கள் வேக மாக வளரும் தன்மை கொண்டதோடு, வாகனங்களை நிறுத்தும் பகுதியில், போது மான அளவில் நிழல் தரக்கூடியவை ஆகும்.

சில மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு, வேர்கள் சேதமடையாத வகையில் பெயர்த்தெடுக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட புதிய பகுதிகளில் மறுநடவு செய்யப்பட்டுள்ளன. புதிய பகுதியில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் வேகமாக வளரவும், அவற்றின் வேர்கள் வலுப்பெறவும் ஊக்கமருந்துகள் செலுத்தப் பட்டுள்ளன. கடந்த வாரத்தில் நிலவிய மிதமான வெப்பநிலையும், தொடர்மழையும் மரங்களை மறுநடவு செய்வதற்கு சாதகமாக அமைந்தன. இந்த மரங்கள் நன்றாக செழித்து வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், அவ்வப்போது கண்காணிக்கப்படும். இந்தப் பணிகளை சென்னை விமான நிலைய தோட்டக்கலைக் குழு செய்து முடித்திருப்பதாக, சென்னை விமான நிலையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.