தனிநபர் சர்வாதிகாரம் நோக்கி நாடு நகர்த்தப்படுகிறது – இரா.முத்தரசன்

தனிநபர் சர்வாதிகாரம் நோக்கி நாடு நகர்த்தப்படுகிறது ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக நாடு முழுவதும் முடக்கம் செய்து மூன்று மாதங்கள் முழுமையாக முடிந்து விட்டன. வழக்கமான இயல்பு நிலை திரும்ப இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை மதிப்பிட முடியவில்லை. ஆனால் இந்த நெருக்கடியான காலத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநில உரிமைகளை பறித்து, அதிகாரங்களை மத்தியில் குவித்துக் கொள்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி வரைவு மின்சார திருத்த மசோதாவை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து ‘ஒரே நாடு, ஒரே மின் தொகுப்பு, ஒரே கட்டணம்‘ என்று முழங்கி வருகிறது. இதனையடுத்து அத்தியாவசிய பண்டங்கள் சட்டம் 1955 திருத்தம் செய்தது உள்ளிட்ட மூன்று வேளாண் வணிக சட்டங்களை ஜூன் 5ஆம் தேதி அவசர சட்டங்களாக அறிவித்துள்ளது. தற்போது நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் பன் மாநிலக் கூட்டுறவு வங்கிகள் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கும் அவசரச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முடக்கம் தொடரும் நிலையில் மிகப் பெரும் பகுதி மக்களின் வாழ்வாதாரம் நொருங்கி கிடக்கின்றது. நாட்டின் செல்வத்தை உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்கள் அன்றாட உணவுத் தேவைகளுக்கு ஆலாய் பறந்து வரும் நேரத்தில், அவர்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான உதவிகள் செய்வதில் மத்திய அரசு போதுமான அக்கறை காட்டவில்லை. ஒத்தி வைக்கப்பட்ட கடன்களின் வட்டியைக் குறைக்கவும் மறுத்து வருகிறது. தொழிலாளர்களின் குறைந்த பட்ச உரிமைகளையும் பறித்து, தற்போது உள்ள 8.மணி நேரம் வேலை நாள் என்பதை 12 மணி நேரம் என உயர்த்தும் உத்தரவுகளையும், ஊதியங்களை வெட்டிக் குறைக்கும் திட்டங்களையும் அறிவித்து வருகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களோடு கலந்து பேசுவதில்லை, நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் விவாதிப்பதில்லை. மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டறிவதில்லை. எல்லா அதிகாரங்களும் பிரதமர் அலுவலத்தில் குவிக்கப்பட்டு, நடைமுறையில் தனிநபர் சார்ந்த சர்வதிகாரம் நோக்கி நாடு நகர்த்தப்படுகிற பேராபத்து வெளிப்பட்டு வருகின்றது. மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல், பாஜக மத்திய அரசின் தயவில் செயல்படும் தமிழ்நாடு மாநில முதலமைச்சரும் ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். கொரானா நோய் தொற்று மறுபடியும் பெருகி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டத்தை நடத்துங்கள் என்று கோருவதை தொடர்ந்து நிராகரித்து வருகிறார். மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைகளும் அலட்சியம் செய்யப் படுகின்றது. அரசு நிகழ்ச்சிகளை ஆளும் கட்சியின் தேர்தல் பரப்புரை மேடையாக்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டியது காலத்தின் தேவையாகும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. என கேட்டுள்ளார்