தனியார் கல்வி வியாபாரத்தில் பகல் கொள்ளை சுகாதாரத்துறை விஷமத்தனத்தை கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன்

கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு வரை பயின்று வந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத முடியாத நெருக்கடி ஏற்பட்டதால், பொதுத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் (2020 -21) கல்வி நிலையங்களை எப்போது திறப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் அரசு திணறிக் கொண்டிருக்கிறது. கொரானா நோய் பெருந்தொற்று தடுப்பு காலம் முடிந்ததும், கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்து வருகிறார். கொரானா பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என்பது “கடவுளுக்கு தான் தெரியும்” என முதலமைச்சர் தனது கடமைப் பொறுப்புகளை கை கழுவி விட்டார்.

இந்த நிலையில் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பது தீவிரமாகியுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி அமைச்சரிடம் புகார் தெரிவித்தால், கல்விக் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்கிறார். ஆனால், தனியார் கல்வி நிலையங்கள் எதுவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கையை ஊசி முனை அளவிலும் மதிக்கவில்லை. அமைச்சரும் அதனை கண்டு கொள்ளவில்லை. ஆதாரப்பூர்வ புகார் கொடுத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் விளக்கெண்ணய் விளக்கம் தருகிறார். கல்வி நிறுவனங்கள் அனைத்தும் சமூக ஊடங்கள் வழியாகவே கட்டணம் தகவல் கொடுத்து வசூல் செய்து முடித்து வருகின்றன. இது கூட அறியாமல் ஒரு அரசு இருக்கும் எனில், அரசு எதற்காக என்ற கேள்வி எழுகிறது. பாலுக்கு காவல் காக்கும் பூனையின் தோழனாக செயல்படும் அஇஅதிமுக மாநில அரசு மக்கள் பிரச்னைகளை தீர்க்க முன்வராமல் எரிகிற வீட்டில் கிடைத்தது லாபம் என ஆதாயம் தேடும் அரசு என்பதை தனியார் கல்வி நிலையங்கள் கட்டணங்கள் என்னும் பெயரில் நடத்தி வரும் பகல் கொள்ளை ஒரு உதாரணம் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக் காட்டுகிறது. கொரானா நோய் பெருந்தொற்று தடுப்புக்கு மருந்து இல்லை சரி, தனியார் கல்வி நிறுவனங்களின் சட்டவிரோத செயலை தடுக்கும் அதிகாரம் இருக்கிறதே, அதனை பயன்படுத்த முடியாத பரிதாப நிலைக்கு ஆளாகி நிற்பது ஏன்? பாடத்திட்டங்கள் வெளியாகாத, கல்வி ஆண்டு எப்போது தொடங்கும் என்பதை முடிவு செய்யாத நிலையில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்தி வரும் கல்விக் கட்டணக் கொள்ளையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதன் மீது தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.