தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு மற்றும் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு விடுக்கும் செய்தி

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு மற்றும் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு விடுக்கும் செய்தி வேதாரண்யத்தில் 25.08.2019 அன்று இளைஞர் மீது கார் மோதியது தொடர்பாக இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், தீ வைப்பு, காவல்நிலையம் மீது கல்வீச்சு, வெட்டு, குத்து என கலவரமாக உருவெடுத்துள்ளது. இதில் வேதாரண்யத்தில் பஸ் நிறுத்தும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய வெறிச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.


டாக்டர் அம்பேத்கர் ஒரு சமூக பிரிவின் தலைவர் அல்ல. அவர் இந்திய அரசியல் சாசன தலைவர். மாபெரும் இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர். நாட்டின் தலைவர். எனவே சிலையை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டப்படி கைது செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்று தமிழக அரசை ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் கேட்டுக் கொள்கிறது. சம்பவம் பட்டப்பகலில் மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம், காவல்நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் நடமாடும் இடத்தில் நடைபெற்றுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்நிலையத்தில் போதுமான காவலர்கள் இல்லை என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். அத்துடன் தங்களுக்குள் உள்ள சிறு, சிறு பிரச்சனைகளை முன்பின் விரோதங்களை, சமூக பிரச்சனையாக, சமூக பதற்றமாக மாற்றும் முயற்சிகளை சம்பந்தப்பட்டோர் கைவிட வேண்டும் என்றும் சமூக நல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும், அனைவருமாக சேர்ந்து பாடுபட முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்

(மு.வீரபாண்டியன்)
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்