தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் உரை

ஜுலை 04, 2020. மரியாதைக்குரிய ஜனாதிபதி திரு ராம் நாத் கோவிந்த் ஜி, மற்றும் இதர சிறப்பு விருந்தினர்களே, முதலாவதாக ஆஷாத பூர்ணிமாவுக்கு எனது வாழ்த்துக் களைத் தெரிவிப்பதன் மூலம் எனது உரையைத் தொடங்குகிறேன். இது குரு பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. நமக்கு அறிவு தந்த நமது குருவினரை நினைவில் கொள்ள வேண்டிய நாள் இது. இந்தப் புனித தினத்தில், நாம் புத்தருக்கு மரியாதை செலுத்துகிறோம். மங்கோலிய கஞ்சூரின் பிரதிகள் மங்கோலியா அரசுக்கு வழங்கப் படுவதில் நான் மகிழ்ச்சி யடைகிறேன். மங்கோலியாவில் மங்கோலிய கஞ்சூர் பரவலாக மதிக்கப்படுகிறது. பெரும்பாலான மடங்களில் அதன் நகல் உள்ளது. நண்பர்களே, புத்தரின் எட்டு வழிப்பாதை பல சமூகங்கள் மற்றும் தேசங்களின் நல் வாழ்வை நோக்கிய பாதையைக் காட்டுகிறது. இது பரிவு மற்றும் கருணையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. பகவான் புத்தரின் போதனைகள் சிந்தனை யிலும், செயலிலும் எளிமையைக் கொண்டாடுகின்றன. புத்தமதம் மரியாதையைக் கற்பிக்கிறது. மக்களுக்கு மரியாதை, ஏழைகளை மதித்தல். பெண்களை மதித்தல். அமைதி மற்றும் அகிம்சையை மதித்தல் ஆகியவற்றைக் கற்பிக்கிறது. எனவே, புத்தமதத்தின் போதனைகள் புவியில் அமைதியான வாழ்க்கைக்கான வழிமுறை யாகும். நண்பர்களே, சாரநாத்தில் அவர் மேற்கொண்ட முதல் பிரசங்கத்திலும், அதன் பின்னர் அவர் கற்பித்த போதனையிலும், புத்தர் நம்பிக்கை, நோக்கம் ஆகிய இரண்டு விஷயங்களைப் பற்றிப் பேசினார். இந்த இரண்டிற்குமிடையே வலுவானதொடர் பிருப்பதை கண்டார். நம்பிக்கையிலிருந்தே நோக்கம் வருகிறது. பகவான் புத்தருக்கு அது மனிதத் துன்பங்களை அகற்றுவதாகும். நாம் இந்த சந்தர்ப்பத்தில், மக்களிடையே நம்பிக்கையை அதிகரிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். நண்பர்களே, நான் 21ஆம் நூற்றாண்டு குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நம்பிக்கை நமது இளம் நண்பர்களிடமிருந்து வருகிறது. நம்பிக்கை, புதுமை, கருணை ஆகியவை துன்பத்தை எவ்வாறு அகற்றும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை நாம் காண விரும்பினால், அதுவே நமது நல்ல தொடக்கமாகும். பிரகாசமான இளம் மனங்கள் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்றன. இந்தியாவில் அதற்கான மிகப் பெரிய தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பு நிலவுகிறது.
பகவான் புத்தரின் எண்ணங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க என் இளம் நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். அவை உங்களுக்கு நல்ல ஊக்கத்தையும் முன்னோக்கி செல்லும் வழியைக் காண்பிக்கும். சில நேரங்களில், அவை உங்களை அமைதிப்படுத்தும் அல்லது உற்சாகப்படுத்தும். புத்தரின் வழிமுறையான தீப்போ பவா உங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக நீங்களே இருங்கள் என்பது ஒரு அற்புதமான மேலாண்மைப் பாடமாகும்.

நண்பர்களே, இன்று உலகம் அசாதாரண சவால்களை எதிர்த்துப் போராடுகிறது. இந்த சவால்களுக்கு, புத்தரின் கொள்கைகளிலிருந்து நீடித்த தீர்வுகள் வரலாம். அவை கடந்த காலங்களுக்கும் பொருத்தமானதாக இருந்தன. நிகழ்காலத்திலும் பொருத்தமாதாக இருக்கின்றன. மேலும், எதிர்காலத்திற்கும் பொருத்தமானதாக இருக்கும். நண்பர்களே, பெளத்தப் பாரம்பரியத் தளங்களுடன் அதிகமான மக்களை இணைப்பது காலத்தின் தேவை. இந்தியாவில் நம்மிடம் அத்தகைய புத்த பாரம்பரியத் தளங்கள் பல உள்ளன. எனது வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியையும் மக்கள் எப்படி அறிவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சாரநாத்தின் வீடாகவே அறிவார்கள். பெளத்த தளங்களுக்கான இணைப்பில் கவனம் செலுத்த விரும்புகிறோம். சில நாட்களுக்கு முன்பு இந்திய அமைச்சரவை குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான தளமாக அறிவித்தது. இது ஏராளமான மக்கள், யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வருவதுடன் பலருக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் காண நல்ல வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்தியா உங்களுக்காக காத்திருக்கிறது!! நண்பர்களே, மீண்டும், உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். பகவான் புத்தரின் எண்ணங்களான நல்லொழுக்கம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் எங்கும் பரவட்டும். அவருடைய ஆசீர்வாதங்கள் நன்மை செய்ய நமக்கு ஊக்கமளிக்கட்டும். நன்றி ! மிக்க நன்றி!..என்றார்