தென்மாவட்டங்களில் காவல்த்துறை அத்து மீறுகிறது – இரா.முத்தரசன் கண்டனம்

தென் மாவட்டங்களில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள். அரசு கட்டுப்பாடு? வீரகேரளம் புதூர் காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற ஒருவரை கடுமையாக தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. வீரகேரளம் புதூர், உயர் நிலைப்பள்ளி வீதியில் வசித்து வருபவர் என்.குமரேசன் (25) த/பெ நவநீதகிருஷ்ணன். இவர் மீது செந்தில் என்பவர் நிலத்தகராறு தொடர்பாக வீரகேரளம் புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் . நிலத் தகராறுகளில் காவல்துறையினர் தலையிடக் கூடாது என்ற தெளிவான உத்தரவு இருப்பதைப் பொருட்படுத்தாத காவலர்கள் குமரேசனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவரது உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப் பெற்று சிகைச்சை பெற்று வந்த குமரேசன் பரிதாபமாக இறந்து போனார். இந்த காட்டுமிராண்டி செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தென் மாவட்டங்களில் தொடர்ந்து வரும் காவல்துறையின் அத்துமீறல்களை பார்த்தால் தமிழ்நாடு காவல்துறை நிர்வாகம் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று ஆழ்ந்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இந்த மனித உரிமை மீறல்களை இனியும் சகித்துக் கொள்ள முடியாது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறது.

சாத்தான்குளம் காவல்துறையின் இரட்டைக் கொலைச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் அடங்கவில்லை. அதற்குள் எட்டயபுரம் காவல்துறையின் அத்துமீறல்களால் மற்றொரு மரணச் செய்தி வெளியாகியுள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் கண்ணன் மகன் கணேச மூர்த்தி (29) கடந்த 20.06.2020 ஆம் தேதியன்று வேலைக்கு சென்று வீடு திரும்பிய நேரத்தில் எட்டயபுரம் காவல்துறையால் வழி மறித்து அவரது இரு சக்கர வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தினக்கூலி வேலை பார்த்து வாழ்க்கை நடத்தும் கணேசமூர்த்தி, அவரது காவல்நிலையம் சென்று, இரு சக்கர வாகனத்தை திருப்பி தருமாறு வற்புறுத்தியுள்ளார். வாகனத்தை தர மறுத்த காவல்துறை கணேசமூர்த்தியை அடித்து விரட்டியுள்ளது. வீடு திரும்பிய கணேசமூர்த்தி இரண்டு, மூன்று நாட்களாக முயற்சித்தும் இரு சக்கர வாகனத்தை மீட்க முடியாததால், விரக்தியடைந்து 26.06.2020ஆம் தேதி மாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது இந்த முடிவுக்குக் காரணம் காவல்துறை அதிகாரி ஒருவர் என்பதை அவர் எழுதிய கடிதம் உறுதிப்படுத்துகிறது. முதலமைச்சர் பொறுப்பில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் தொடரும் அத்துமீறல்களுக்கு அவரும் பொறுப்பேற்க வேண்டும். கணேசமூர்த்தி தற்கொலை மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. என கேட்டுள்ளார்