பிரம்மாண்ட அரங்கில் படமாகி வரும் சிலம்பரசன் டி.ஆர் -ன் “மாநாடு” பாடல் காட்சி

‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது வெங்கட் பிரபு டைரக்சனில் சிலம்பரசன் டி.ஆர் நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

கதாநாயகியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி, ஒய் ஜி மகேந்திரன், எஸ்.ஜே. சூர்யா, உதயா, கருணாகரன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், பஞ்சு சுப்பு, டேனியல் ஆகியோர் கொண்ட ஒரு நடிகப் பட்டாளமே இந்தப் படத்தில் பங்கேற்று நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரவீண் கே.எல் எடிட்டிங் செய்கிறார். ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சியைக் கவனிக்க படம் வேக வேகமாக உருவாகி வருகிறது.

“மாநாடு” படத்திற்காக தற்போது சென்னைக்கு மிக அருகில் உள்ள தீம் பார்க் ஒன்றில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கலை இயக்குநர் உமேஷ் குமார் மேற்பார்வையில் மிகப் பிரமாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் தற்போது பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. சிலம்பரசன் டி.ஆர் உடன், ‘சென்னை-28’ (பார்ட்-2) மற்றும் ‘யாகன்’ ஆகிய படங்களில் நடித்த அஞ்சனா கீர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்பிரம்மாண்ட பாடல் காட்சியில் சிலம்பரசன் டி.ஆர், கல்யாணி பிரியதர்ஷனுடன் அஞ்சனா கீர்த்தி மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட மும்பை, பெங்களூரு நடனக் கலைஞர்கள் பங்கேற்று ஆடி வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் நடன வடி வமைப்பு செய்து வருகிறார். இது தவிர படத்தின் சில முக்கிய காட்சிகளும் இங்கே படமாக்கப்பட இருக்கின்றன.

படப்பிடிப்புக்கு வருவதற்கு தாமதம் செய்கிறார் என இதுவரை தன் மீது கூறப்பட்டு வந்த முக்கியமான ஒரு குற்றச்சாட்டை பொய்யாக்கும் விதமாக, படத்தின் நாயகன் சிலம்பரசன் டி.ஆர் ‘மாநாடு’ படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதனால் இயக்குநர் வெங்கட் பிரபு தான் ஏற்கனவே திட்ட மிட்டபடி ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதனின் துணையுடன் விறுவிறுவென காட்சிகளை படமாக்கி வருகிறார். முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப்படம் உருவாகிறது. சிலம்பரசன் டி.ஆர் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.