மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கு நன்றி பாராட்டுக்கள் – இரா.முத்தரசன்

மக்கள் நன்மதிப்பை பெற்ற அரசியல் தலைவர்கள், பொது வாழ்வுப் பிரமுகர்கள், ஆன்மிகம் சொற்பொழிவாளர் உள்ளிட்டோர் மீது ஆபாசக் குப்பைகளைக் கொட்டி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்தும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில தலைமை அலுவலகத்தின் படத்தையும், மூத்த தலைவர் இரா நல்லகண்ணு அவர்களது படத்தையும் ஆபாசமாக பதிவிட்டு அவதூறு பரப்பும் வன்முறை கும்பல்களை கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று (22.07.2020) தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் ஆர்ப்பட்டங்கள் எழுச்சியோடும், உணர்ச்சி மிக்கதாகவும் நடைபெற்றுள்ளன. சமூக மோதலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டு வரும் சமூக விரோத சக்திகளை வேரோடும், வேரடி மண்ணோடும் பெயர்தெறிந்து, சுயமரியாதை, சமத்துவ, சமூகநீதி சார்ந்த ஜனநாயக அறநெறிகளை பாதுகாக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் வலிமையை வெளிப்படுத்தும் விதமாக ஆர்ப்பாடங்கள் வெற்றிகரமாக நடந்துள்ளன.
வெறுப்பு அரசியலை விதைத்து வரும் விஷமிகள் பரப்புரையை ஏதோ ஒரு கட்சியின் மீதான தாக்குதலாக மட்டும் கருதி ஒதுங்கி விடாமல், பத்திரிகை அரசியல் நாகரிகம், பண்பாடு, நெறிசார்ந்த ஒழுக்கம் என அனைத்தையும் சீரழித்து ஜனநாயக பண்புகளை அழித் தொழிக்கும் படுபாதகச் செயல் என்பதை உணர்ந்து இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஜனநாயக உணர்வோடு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), திராவிடர் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. என்று இரா.முத்தரசன் கூறினார்