மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கலந்தாய்வுக் கூட்டம் 24.08.2019

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், 24.8.2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை தாயகத்தில், மாநில இளைஞரணிச் செயலாளர் பொறியாளர் வே.ஈசுவரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் ஆய்வு மையச் செயலாளர் பொறியாளர் மு.செந்திலதிபன், மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர் வழக்கறிஞர் க.அழகுசுந்தரம், ஆட்சிமன்றக் குழுச் செயலாளர்  .ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, மா.வை. மகேந்திரன், அணிச் செயலாளர்கள் மணவை தமிழ்மாணிக்கம், பால.சசிகுமார், ஆ.பாஸ்கர சேதுபதி மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

கலந்தாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.

தீர்மானம் 1: தமிழர்களின் உரிமைக்காகவும், தமிழ்நாட்டு வாழ்வாதாரத்தைக் காக்கவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்ற போராளி திராவிட இயக்கத்தின் போர்வாள் கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், பொதுச்செயலாளர் தன்னுடைய அசாத்திய திறமையாலும் அறிவாற்றலாலும் நமது மாநிலமான தமிழ்நாட்டுக்காக மட்டுமன்றி, இந்தியா முழுவதிலுமான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணும் வகையில் மாநிலங்களவையில் தனது ஆழமான கருத்துக்களை எடுத்து வைத்து உரையாற்றி வருவதற்கும் இந்தக் கூட்டம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: பிற்படுத்தப்பட்ட சாமானிய மக்களும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக உழைத்திட்ட பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செப்டம்பர் 15-ஆம் தேதியன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. இம்மாநாட்டில் இளைஞர் அணியினர் சீருடையுடன் பெரும் திரளாக பங்கெடுப்பது என்று இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3: பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகின்ற வரையில் இந்த நாட்டில் இருமொழிக் கொள்கையே இருக்குமென்று நாடாளுமன்றத்தில் உறுதிமொழி அளித்திட்ட முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உறுதிமொழியை குழி தோண்டிப் புதைக்கின்ற வகையில் மும்மொழிக் கொள்கை என்கின்ற பெயரில் கட்டாயமாக இந்தியைத் திணிக்கின்ற மத்திய அரசாங்கத்தின் முயற்சியையும், மூன்றாம் வகுப்பிலிருந்தே பொதுத்தேர்வு என்கின்ற புதிய கல்வி முறையைப் புகுத்தி, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு பங்கம் விளைவிக்கின்ற புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. கல்வித்துறையை முழுவதுமாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், மாநிலங்களின் கருத்துக்களை கேட்காமலேயே, மாநில மக்களின் விருப்பத்திற்கு எதிராக மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கின்ற இந்த புதிய கல்விக் கொள்கை திட்டத்தை முற்றிலுமாக புறக்கணிக்கின்றோம்.

தீர்மானம் 4: உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் நகர்புற மற்றும் கிராமபுறங்களில் இருக்கின்ற சுகாதார சீர்கேட்டை சரிசெய்யவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், சாக்கடை வசதிகள், சாலை வசதிகளை சீர்படுத்தவும், உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிதுவத்தை நிலைநாட்ட விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட மாநில அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5: தலைமைக் கழகம் அறிவுறுத்தி இருக்கின்றபடி, வருகின்ற அக்டோபர் மாதம் துவங்க இருக்கின்ற புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் மாவட்ட கழகத்துடன் இணைந்து புதிய இளைஞர்களை கழகத்தில் சேர்த்து இயக்கத்திற்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞர் அணியினர் தீவிரமாக செயல்படுவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 6: சென்னை விமான நிலையத்தில் பேரறிஞர் அண்ணா பெயரில் பன்னாட்டு முனையமும், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் உள்நாட்டு முனையமும் செயல்பட்டு வந்த நிலையில், விமான நிலைய நிர்வாகம் இரு தலைவர்கள் பெயரையும் நீக்கிவிட்டு புதிய பெயர் பலகைகளை அமைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா பெயர்களை விமான நிலைய பெயர் பலகையில் நீக்கி இருப்பதற்கு மறுமலர்ச்சி தி.மு.க. இளைஞர் அணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. முன்பு இருந்தது போன்று உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும் பன்னாட்டு முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரையும் உடனடியாக இடம்பெறச் செய்ய வேண்டும். இல்லையேல் விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம், தலைவர் வைகோ அவர்கள் அனுமதியுடன் மறுமலர்ச்சி தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடத்தப்படும் என்று இக்கூட்டம் எச்சரிக்கிறது.