ரயிலிலிருந்து தவறி விழவிருந்த பெண்மணியை காப்பாற்றிய உதவி ஆய்வாளர் மற்றும் தப்பியோடிய பழைய குற்றவாளியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல் நிலைக்காவலர் ஆகிய இருவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

.ரயிலிலிருந்து தவறி விழவிருந்த பெண்மணியை காப்பாற்றிய உதவி ஆய்வாளருக்கு பாராட்டு மற்றும் காவல் உதவி ஆய்வாளரால் காப்பாற்றப்பட்ட பெண்மணி சென்னை பெருநகர காவல் ஆணையாளரை நேரில் சந்தித்து நன்றி கூறினார். சென்னை, மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை, ராகவா நகர், எண்.3/358 “ஏ” என்ற முகவரியில் திருமதி.சுமதி கோகுலகிருஷ்ணன், வ/43, க/பெ.கோகுலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 30.08.2019 அன்று மாலை 5.00 மணியளவில் புனித தோமையர் மலை ரயில் நிலைய நடைமேடை 1ல் கடற்கரையை நோக்கி வந்த மின்சார ரயிலில் ஏற முயன்ற போது, ரயில் புறப்பட்டதினால் நிலைதடுமாறிய சுமதி கோகுலகிருஷ்ணன் ரயில் பெட்டியின் கம்பியை பிடித்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுள்ளார். மேற்படி பெண்மணி ரயிலிலிருந்து நிலை தடுமாறி கிழே விழும் தருவாயிலிருந்ததை கவனித்த, பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த எஸ்-2 விமானநிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.வி.அலெக்ஸாண்டர் அவர்கள் விரைந்து செயல்பட்டு ரயிலை பின்தொடர்ந்து பிளாட்பாரத்தில் ஒடி தவறி விழும் நிலையிலிருந்த பெண்மணியை கைத்தாங்கலாக தூக்கி காப்பாற்றியுள்ளார். பின்னர் அவர் பணிக்கு சென்று விட்டார். தக்க சமயத்தில் எவ்வித காயமும் ஏற்படாவண்ணம் காப்பாற்றிய உதவி ஆய்வாளர் வி.அலெக்ஸாண்டரை பாராட்டி சுமதி கோகுலகிருஷ்ணன் அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளருக்கு இ-மெயிலில் கடிதம் அனுப்பினார். கடிதத்தை பார்வையிட்ட காவல் ஆணையாளர், தக்க சமயத்தில் உதவி செய்து சென்னை பெருநகர காவல் துறைக்கு நற்பெயர் வாங்கி கொடுத்த உதவி ஆய்வாளர் திரு.வி.அலெக்ஸாண்டர் மற்றும் இ-மெயிலில் கடிதம் அனுப்பிய திருமதி.சுமதி கோகுலகிருஷ்ணன் ஆகியோரை இன்று நேரில் வரவழைத்து நடந்த சம்பவத்தை பற்றி விசாரித்தார். மேலும் உதவி ஆய்வாளரின் துணிச்சலான பணியை பாராட்டி வெகுமதி வழங்கினார். திருமதி.சுமதி கோகுலகிருஷ்ணன் தனது கணவருடன் சேர்ந்து வந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்களிடம், உதவி ஆய்வாளர் அலெக்ஸாண்டரின் பணியை வெகுவாக பாராட்டி சென்னை பெருநகர காவல்
துறைக்கு நன்றி தெரிவித்தார்.

 வளசரவாக்கம் பகுதியில் ரோந்து வாகன உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டு தப்பியோடிய பழைய குற்றவாளியை முதல் நிலைக்காவலர் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆர்-9 வளசரவாக்கம் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு.ஏ.குணசேகர் 03.09.2019 அன்று அதிகாலை 04.30 மணியளவில் வளசரவாக்கம், ஆற்காடு ரோடு, பாலாஜி கெஸ்ட் ஹவுஸ் அருகில் செக்டார் ரோந்து பணியிலிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த பழைய குற்றவாளி தங்கவேல் (58), த/பெ.ராமசாமி, எம்.பி.குப்பம், குடியாத்தம் தாலுக்கா, வேலூர் மாவட்டம் என்பவரை பிடித்து ரோந்து வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் கொண்டுவரும்போது, வழியில் குற்றவாளி தங்கவேல் ரோந்து வாகன பொறுப்பு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முரளிதரனை கீழே தள்ளிவிட்டு தப்பியோடியுள்ளார். உதவி ஆய்வாளர் முரளிதரன் குற்றவாளியை பிடிக்க முற்பட்டபோது, நிலைதடுமாறி தவறி கீழே விழுந்ததில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனே அருகிலிருந்த முதல் நிலைக்காவலர் திரு.ஏ.குணசேகர் (மு.நி.கா.28639) துரிதமாக செயல்பட்டு தப்பியோடிய குற்றவாளியை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். குற்றவாளியை பிடிக்க முயன்றதில் காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முரளிதரன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட குற்றவாளி தங்கவேல் மீது திருட்டு மற்றும் பீரோபுல்லிங் வழக்குகள் உள்ளது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். ரயிலிலிருந்து தவறி விழவிருந்த பெண்மணியை விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய எஸ்-2 விமானநிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.வி.அலெக்ஸாண்டர் மற்றும் தப்பியோடிய பழைய குற்றவாளியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆர்-9 வளசரவாக்கம் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு.ஏ.குணசேகர் (மு.நி.கா.28639) ஆகிய இருவரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 03.9.2019 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.