ரயில் போக்குவரத்தை படிபடியாக ஒழித்து கட்டும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கன்னியாகுமரி மாவட்ட உபயோகிப்போர் சங்கம் (KKDRUA) குற்ற்சாட்டு.

இந்திய இரயில்வே இந்திய யூனியன் அரசின் அமைச்சகத்தின் கீழ் நேரடியாக இயங்கும் ஓர் துறை (நிறுவனம் அல்ல) ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இது ஒரு ரயில் நெட்வொர்க் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் ஒரு தேசிய போக்குவரத்து அமைப்பாகும். இது இந்தியர்களால் பெரிதும் விரும்பப்படும் இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாகும். இது நீண்ட தூரங்களின் பல்வேறு இடங்களை இணைக்கிறது மற்றும் மிகவும் வசதியானது. விமானபோக்குவரத்து நீண்ட தூரத்தை இணைப்பதற்கான மிக விரைவான வழி என்றாலும், அவற்றின் பயணகட்டணம் அதிகமாக இருக்கின்ற காரணமாக, மக்கள் ரயில்களில் பயணிக்க விரும்புகிறார்கள். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது; 16 இலட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்களாகும். இது தினமும் 14,444 தொடருந்துகளை இயக்குகிறது.

அரசு என்பது மக்களிடம் வரி வசூல் செய்து பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை அதாவது மருத்துவம், கல்வி, அடிப்படைகட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இந்த வசதிகளை செய்து கொடுப்பதில் வணிக இலாப நோக்கு இருக்க கூடாது. முழுக்க சேவை மனபான்மையுடன்தான் செய்ய வேண்டும். குறிப்பாக அரசு மருத்துவமனைகள் அமைத்தல், ஐஐடி போன்ற கல்விநிறுவகங்கள், அரசு போக்குவரத்து குறிப்பாக ரயில் போக்குவரத்தை கூறலாம். ரயில் போக்குவரத்து முழுக்க முழுக்க அரசு கட்டுபாட்டில் வைத்து சதாரண பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை மனபான்மையடன் செயல்படும் ஓர் அமைப்பு ஆகும்.

வளர்ந்த நாடுகளில் பொதுமக்களை தனி வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்து பொது போக்குவரத்து பஸ், ரயில் இதிலும் குறிப்பாக ரயில் போக்குவரத்துக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து பயணம் செய்ய வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் அரசுக்கு பல்வேறு இடங்களில் தேவையில்லாத திட்டங்கள் செயல்படுத்துதல், நிதி செலவை குறைத்தல், சுற்றுசூழல்மாசு பிரச்சனை என பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றது. ஆனால் வளரும் நாடான இந்தியாவில் பொது போக்குவரத்தான ரயில்போக்குவரத்தை படிபடியாக ஒழித்து கட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றனர்.

ரயில்வேயில் தனியார்மயம் என்பது தற்போதே அமுலில் தான் இருக்கிறது. ரயில்களை சுத்தப்படுத்துவது, உணவு சமைத்து பரிமாறுவது, குளிர்சாதனப் பெட்டிகளில் கம்பளிப் போர்வை வழங்குவது, ரயில் நிலையங்களில் கழிவறைகளை பராமரிப்பது, ரயில்களில் தண்ணீர் பிடித்தல் என பல்வேறு பணிகள் தனியாரிடம் அவுட்சோர்ஸ் முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவுட்சோர்ஸ் முறையில் தனியாரின் கைகளால் சுத்தப்படுத்தப்பட்டு வரும் ரயில்கள் என்ன லட்சணத்தில் இருக்கின்றன, கழிவறைகள் எப்படி இருக்கின்றன, கேட்டரிங் எப்படியிருக்கிறது என்பதெல்லாம் நாம் அறிந்தது தான். மட்டுமின்றி இவற்றில் எல்லாம் வரையமுறையின்றி கட்டணக் கொள்ளையும் அடிக்கப்படுகின்றன.

தற்போது ரயில்வேத்துறை தனியாரால் இயக்கப்படும் ரயில்கள் பற்றிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் கன்னியாகுமரி – தாம்பரம், கன்னியாகுமரி – எர்ணாகுளம், திருநெல்வேலி – தாம்பரம், திருநெல்வேலி – கோயம்பத்தூர், மதுரை – தாம்பரம் போன்ற ரயில்கள் தென்மாவட்டங்களிலிருந்து இயக்கப்பட உள்ளது.

வருமானம் அதிகமுள்ள பெருநகரங்களுக்கு மட்டும் அதிக சேவை இருக்கும். அதிலும் கட்டணம் பல மடங்கு உயரும். சிறு நகரங்களுக்கோ, ஊரகப் பகுதிகளுக்கோ போகும் ரயில்களும், சாதாரண மக்கள் பயன்படுத்தும் முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் ஒழிக்கப்படும். தொழிலாளர்கள் குறைக்கப்படுவார்கள். ஒப்பந்த சேவை அடிப்படையில் தொழிலாளிகள் இருப்பார்கள். அவர்கள் கசக்கி பிழிந்து வேலை வாங்கப்படுவார்கள். பாதுகாப்பு உணர்வு அதிகம் தேவைப்படும் ரயில்வேயில் அது குறையும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு அவ்வப்போது தீர்மானிக்கப்படுவது போல கட்டணங்களும் சீசனுக்கேற்ப, கிராக்கிக்கேற்ப தீர்மானிக்கப்படும். இதனால் காசுள்ளவருக்கே உடன் சேவை என்று ரயில்வே துறை மாற்றியமைக்கப்படும்.

ரயில்வேத்துறையில் நல்ல வருவாய் உள்ள வழித்தடங்களை தனியாருக்கு தாரைவாத்துவிடுவார்கள். ஏனென்றால் தனியார் கம்பெனிகளுக்கு இந்த தடங்கள் மட்டுமே வேண்டும். குறிப்பாக மதுரை- சென்னை, சென்னை – கோவை, சென்னை – பெங்களுர், சென்னை-நாகர்கோவில் ஆகிய தடங்கள் மட்டும் அதிக வருவாய்தரும் பொன்முட்டையிடும் வாத்து போன்ற தடங்கள் ஆகும். இதிலிருந்து கிடைக்கும் வருவாய் வருவாய் குறைந்த மற்ற தடங்களில் ஈடு செய்கின்றது. இனி வருவாய் அதிகம் உள்ள தடங்களை தனியாருக்கு கொடுத்துவிட்டால் மற்ற தடங்களில் ரயில்கள் இயக்குவதை படிபடியாக நிறுத்திவிடுவார்கள். ஏனென்றால் ரயில்வேத்துறையின் வருவாய் இழப்பு அதிகமாக இருக்கின்ற காரணத்தால் ரயில்கள் இயக்குவதையே நிறுத்தி விடுவார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் ரயில்வே செய்திகளில் வேண்டும் என்றே தனியார் மையம் என்ற இலக்கை நோக்கி பயணிக்க நஷ்டத்தில் இயங்குகின்றன என்று திட்டம் போட்டே செய்திகளை வெளியீட்டு வருகின்றனர். ஏனென்றால் ரயில்வேத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டி மறைமுகமாக மக்கள்மத்தியில் பதியவைக்க நடவடிக்கையை அழகாக செய்து வருகின்றனர். ரயல்களில் கட்டணம் அதிகரித்து கொண்டே சென்றதாலும், பிரிமியம் கட்டண காரணமாக பயணிகள் வேறு மார்க்கங்களில் சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்து என பயணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். தற்போது சென்னை, மும்பை, டில்லி, கொல்கொத்தா போன்ற நகரங்களிலிருந்து இயங்கும் குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்க காரணம் விமான கட்டணமும் ரயில் கட்டணமும் ஒரே அளவில் இருந்து பயணநேரம் விமானத்தில் குறைவாக இருக்கின்ற காரணத்தால் பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர். தனியார் விமான நிறுவனங்கள் போட்டியின் காரணமாக குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருகின்றன.

ரயில் கட்டண உயர்வு காரணமாக வெளி ஊர்களுக்கு குடும்பமாக செல்லும் பயணிகள்; சாலை மர்க்கமாக அதிக அளவு பயணம் செய்ய தற்போதே தொடங்கிவிட்டனர். இவ்வாறு சாலைமர்க்கமாக செல்லும் போது அதிக அளவு சுற்றுசூழல் மாசு , கார்பன்அளவு அதிகரிப்பு, வாகனபோக்குவரத்து நெருக்கடி, அதிக அளவில் சாலை விபத்துகள், சாலைவிரிவாக்கம், போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இது மட்டுமில்லாமல் பெட்ரோலிய பொருட்ஙகளின் தேவையும் அதிகரித்து அதிக அளவில் அன்னியசெலவாணி செலுத்தி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யநேருகின்றது. சிலவேளைகளில் இது தனியார் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். பெருகிவரும் மக்கள்தொகை, பொதுமக்களின் பயணங்கள் என்பதை கணக்கில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து தினசரி ரயிலாவது தமிழகத்துக்கு இயக்க வேண்டும். ஆனால் ரயில்வேத்துறை 2015-ம் ஆண்டு முதல் புதிய ரயில்கள் இயக்குவதை சிறது சிறிதாக மறுத்து வருகிறது. இதற்கு காரணம் ரயில்வேதுறையில் தனியாரை நுழைத்து தனியார் ரயில்கள் இயக்குவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே புதிய ரயில்களை இயக்க மறுத்து வருகின்றது. வருடம் தோறும் புதிய ரயில்களை அறிவித்து இயக்கினால் பயணிகளின் இடநெருக்கடி பெரிய அளவில் இருக்காது. இவ்வாறு இடநெருக்கடி இல்லாமல் இருந்தால் தனியாரால் இயக்கப்படும் ரயில்களில் யாருமே பயணம் செய்ய மாட்டார்கள். இதனால் தனியார் ரயில்களில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காது. இவ்வாறு வருவாய் வராமல் இருந்தால் தனியார் முதலாளிகள் ரயில் இயக்க முன்வரமாட்டார்கள். இதற்காகவே ரயில்வே வாரியம் 2015-ம் ஆண்டு முதல் புதிய ரயில்களை இயக்குவதை படிபடியாக பல்வேறு காரணங்களை காட்டி நிறுத்தினார்கள். இதனால் தற்போது தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு இயங்கும் ரயில்களில் முன்பதிவு இருக்கைகள் கிடைக்காமல் கூட்டம் அலைமோதுகின்றது. இன்னமும் ஐந்து ஆண்டுகளில் இந்த தடத்தில் சென்னைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு கணிசமாக உயரும். இவ்வாறு உயரும் போதுதான் தனியார் ரயில்களில் இயக்க முன்வருவார்கள். ஏனென்றால் இவ்வாறு அதிக தேவை இருந்தால் மட்டுமே தங்கள் விருப்பபடி எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் வசூலிக்க முடியும்.

இந்திய ரயில்வே காலஅட்டவணை மாநாட்டில் தீர்மானம் செய்யப்பட்ட ரயில்களில் பல ரயில்கள் தனியார் ரயில்கள் இயக்கி அவர்களின் வருவாய் குறையகூடாது என்று இன்னமும் இயக்கபடாமல் வேண்டும் என்றே கிடப்பில் போட்டுள்ளனர். குறிப்பாக நாகர்கோவில் – தாம்பரம் வாரம் ஐந்து நாட்கள், நாகர்கோவில் -சென்னை சென்ட்ரல் வாரம் மூன்றுமுறை, கன்னியாகுமரி – வாரணாசி வழி சென்னை, கன்னியாகுமரி – புதுச்சேரி வாரம் இரண்டுமுறை போன்ற ரயில்களை கூறலாம்.

இந்த கோரோனா காலத்தில் பொது போக்குவரத்துக்கு மக்கள் எவ்வளவு சிரமபட்டார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். அரசு போக்குவரத்து மட்டுமே எந்த ஒரு இலாப நோக்கு இல்லாமல் சேவை மனபான்மையுடன் பேருந்துகளை இயக்கியது. தனியார் பேருந்துகள் ஒரு மார்க்கம் கூட்டம் இல்லாமல் காலியாக இயக்க வேண்டும் என்ற காரணத்தால் தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்க முன்வரவில்லை. இதைப்போல் சிறப்பு ரயில்களும் ஐந்து முதல் 50 பயணிகள் என மிகக்குறைந்த பயணிகளுடன் இயங்கியது. இந்த ரயில்கள் எல்லாம் தனியார் கைகளில் இருந்தால் அவர்கள் முழு ரயிலும் நிரம்பும் அளவில் பயணிகள் இருந்தால் மட்டுமே ரயில்களை இயக்குவார்கள். அவர்களுக்கு லாபமே குறிகோளாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்த பணத்தில் பல கோடிகள் முதலீடு செய்து ரயில் பெட்டிகளை வாங்கி வைத்துவிட்டு சேவை செய் என்றால் யாருமே செய்யமாட்டார்கள். அவர்களிடம் சேவை மனபான்மையில் ரயில்கள் இயக்கு என்று கேட்கவும் முடியாது. ஆனால் அரசு மக்கள் செலுத்தும் வரிபணத்தில் பலகோடிகள் செலவு செய்து இருப்புபாதைஅமைத்து, ரயில் பெட்டிகள், ரயில் இஞ்சின் வாங்கி முழுக்க அரசின் கட்டுபாட்டில் ரயில்கள் இருந்தால்தான் சேவை மனபான்மையுடன் இயக்க முடியும்.

நன்மைகள்:- 1. உலகதரம்வாய்ந்த சேவை கிடைக்கும் என்று சொல்லபடுகின்றது. 2. விமானத்தில் பணிபெண்கள் உள்ளது போன்று இந்த ரயில்களிலும் சேவை கொண்டுவரப்படும். 3. முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரயிலாக இயங்கும். 4. விமானங்களில் உள்ளது போன்று அதிக கட்டணம் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் முன்பதிவு இருக்கைகள் கிடைக்கும் 5. கடைசிநேர பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 6. ரயில்வேத்துறை இனி புதிய ரயில் பெட்டிகள், ரயில் இஞ்சின்கள் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதற்காக தற்போது செலவு செய்யும் நிதி மிச்சம் ஆகும். 7. பயணகட்டம் உணவுடன் வசூலிக்கப்பட்டு ராஜதாணி ரயில்களை போன்று உணவு வசதி கிடைக்கும். 8. ரயில் பெட்டிகள், கழிவறைகள், இருக்கைகள் உலகதரத்தில் சுத்தமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 9. இந்த ரயில்களில் திரைவிரிப்புகள், தொடுதிரை கணிணி வசதி, படுக்கைவசதி, தியேட்டர்வசதி, ஜிம்வசதி, குளிக்கும் வசதி, என உலகதரத்தில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தீமைகள்: 1. விண்ணை தாண்டிய கட்டணம் வரமுறையின்றி வசூலிக்கப்படும். 2. குறைந்த கட்டணத்தில் இங்கும் முன்பதிவில்லாத பெட்டி, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி போன்ற பெட்டிகள் இருக்காது 3. வருவாய் இல்லாத வழிதடங்கள், வருவாய் இல்லாத ரயில்கள், வருவாய் இல்லாத சிறிய ரயில் நிலையங்கள் படிபடியாக படிபடியாக மூடப்படும். 4. மக்கள்வரிபணத்தில் அமைக்கப்பட்ட ரயில்டிராக்குகள் வழியாக தனியார் ரயில்கள் இயங்கி லாபத்தை அவர்கள் கொண்டு செல்வார்கள். 5. தற்போது உள்ளது போன்று எல்லா தடங்களிலும் இந்த ரயில்கள் இயக்கப்படாது. 6. புதிய இருப்புபாதை அமைக்கும் திட்டங்கள் இனி ஒருபோதும் இருக்காது. 7. ரயில்வேதுறையில் அனைத்தும் இனி வணிகநோக்குடனே இருக்கும் சேவை மனபான்மை சுத்தமாக இருக்காது. 8. புதிய அரசு வேலைவாய்ப்பு உருவாகாது, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இருக்காது 9. தனியார் வேலைவாய்ப்பில் எந்த ஒரு வேலைபாதுகாப்பு, பணிநிரந்தரம், ஊதியஉயர்வு போன்றவைகள் இருக்காது. பணிநேரம் கூடுதலாக இருக்கும் 10. ஐசிஎப் போன்ற ரயில் பெட்டி தொழிற்சாலைகளிடமிருந்து ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வே கொள்முதல் செய்யாது. இதனால் இந்த தொழிற்சாலை படிபடியாக மூடி வேண்டிய நிலை ஏற்பட்டு தற்போதைய பணியாளர்கள் அனைவரும் வேலை இழந்து அடுத்த காலங்களில் புதிய வேலைவாய்ப்பும் உருவாகாது. 11. தமிழகத்தில் தற்போது நடைபெறும் புதிய இருப்புபாதை பணிகளை இனி தொடர மாட்டார்கள். ஏனென்றால் வருவாய் குறைவாக இருக்கின்ற காரணத்தால் தொடர வாய்பில்லை
12. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்திவிட்டால் தற்போது உள்ள இருப்புபாதைகளையும் தனியாரிடம் கொடுக்கும் திட்டத்தை அடுத்து செயல்படுத்துவார்கள்.