வளைகுடாவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தனியார் விமான சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும் – ஜவாஹிருல்லா

வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தமிழகம் அழைத்து வருவது குறித்து மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பின்வரும் கடிதத்தை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியிர் எம் எச் ஜவாஹிருல்லா அனுப்பியுள்ளார்.

கடித விபரம்: கொரோனாவினால் முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட காரணத்தால், தாயகம் திரும்ப முடியாமல் தத்தளிக்கும் இந்தியர்களுக்காக இந்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிவித்துள்ளது ஆனால் இந்த சேவை மூலம் வளைகுடா நாடுகளிலிருந்து தாயகம் திரும்ப காத்திருக்கும் தமிழர்களுக்கு பயனுள்ளதாக அமையவில்லை. வந்தே பாரத் திட்டத்தில் முதல் வாரத்தில் மொத்தம் 64 சேவைகள் திட்டமிடப்பட்டதில் 25 சேவைகள் வளைகுடா நாடுகளிலிருந்து தாயகம் திரும்புபவர்களுக்காக ஒதுக்கப்பட்டன. இவற்றில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு வெறும் 4 சேவைகள் மட்டுமே. அவற்றில் சவுதி; பஹ்ரைன்; கத்தார் நாடுகளில் வாழும் தமிழர்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இரண்டாம் வாரத்தில் அதிகபட்சமாக 109 சேவைகள் திட்டமிடப்பட்டிருந்தாலும், இதிலும் வளைகுடா நாடுகளிலிருந்து தமிழகத்திற்கான சேவை மிகவும் குறவாகவே இருந்தது. மூன்றாவது கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 535 சேவைகளில் வளை குடா விலிருந்து 2 விமானங்கள் மட்டுமே சவூதியிலிருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஏனைய வளைகுடா நாடுகளுக்கு ஒரு சேவை கூட ஒதுக்கப்படவில்லை. வளைகுடா நாடுகளிலிருந்து தமிழகம் திரும்ப அந்தந்த நாடுகளில் பதிவு செய்து இரண்டு மாதங்களுக்கு மேலாக, கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள், சுற்றுலா விசாவில் சென்றவர்கள், வேலை இழந்தவர்கள்; மேற்படிப்பிற்காக நுழைவுத் தேர்வு எழுதத் தயாராகி வரும் மாணவமணிகள் என பல்வேறு தரப்பினர் ஆயிரக்கணக்கில் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். எனவே, வந்தே பாரத் திட்டத்தின் மூலமோ அல்லது தனியார் விமானங்கள் மூலமாகவோ, வளைகுடா நாடுகளிலிருந்து குறைந்தது வாரத்திற்கு 10 விமானங்களை உடனடியாக இயக்க இந்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பாக, குவைத் நாட்டில் குடியுரிமை காலம் காலாவதியான நிலையில் இருந்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, தாயகம் திரும்ப இருந்த நிலையில் விமான நிலையங்கள் மூடப்பட்டதால், ஊருக்கும் திரும்ப இயலாமலும், குவைத்தில் வேலை இல்லாமலும் சுமார் 3000 தமிழர்கள் உள்ளிட்ட 8000 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இவர்களில் இதுவரை 500 தமிழர்கள் உள்ளிட்ட 2000 இந்தியர்களுக்கான அவசர கால கடவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தும், வந்தே பாரத் விமான சேவை மூலம் 150 தமிழர்கள் மட்டுமே தாயகம் திரும்பியுள்ளனர். மீதமுள்ள 350 தமிழர்களுக்குமான விமான சேவையை உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் எஞ்சியுள்ள 2500 தமிழர்கள் உள்ளிட்ட 6000 இந்தியர்களுக்கும் அவசரக் கால கடவுச்சீட்டு வழங்க இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். மேலும் இவர்கள் அனைவரும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வேலையோ; வருமானமோ இன்றி அல்லல்படுவதால் இந்திய அரசு கருணையுடன் இவர்களை இலவசமாக இந்தியா அழைத்து வர தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்வும் கோரிக்கை வைக்கிறோம்.

இதே போல் மலேசியாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர போதிய விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை. வந்தே பாரத் 3ம் கட்டத்தில் ஒரு சேவை கூட அறிவிக்கப்படவில்லை. அங்கும் ஏராளமான தமிழர்கள் விமான சேவையில்லாமல் தவித்து வருகின்றார்கள். எனவே மலேசியாவிலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் விமானச் சேவைக்கு மத்திய அரசிற்குத் தமிழக அரசு அழுத்தம் அளிக்க வேண்டும்.

வந்தே பாரத் திட்டம் வழியாக மட்டுமே வளைகுடாவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் முடிவு தொடருமேயானால் அனைவரும் தமிழகம் வருவதற்குக் குறைந்த பட்சம் 6 மாத காலம் ஆகிவிடும். வளைகுடாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த தாமதம் தமிழர்களின் நலனுக்கு எதிராக அமைந்து விடும். எனவே வளைகுடாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வர முன்வந்துள்ள தனியார் விமான நிறுவனங்களான கோ ஏர்; கல்ஃப் ஏர்; ஸ்பைஸ் ஜெட் முதலியவற்றுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க தமிழக அரசு அழுத்தம் அளிக்க வேண்டும். பிரத்தியேக விமான சேவை (chartered flights) மூலம் தாயகம் திரும்பத் தமிழர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கவும் தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழர்களின் நலனை பாதுகாக்க மிகவும் அவசரக் கால நடவடிக்கையாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மேலே விவரித்துள்ளவை நடைமுறைக்கு வர விரைந்து ஆவணச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்