விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – இடைத்தேர்தலில திமுக கூட்டணிக்கு ஆதரவு – முத்தரசன்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான விககிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 21, 2019 நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.கழகம், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டி யிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மதவாத, சாதிவெறி சக்திகளை எதிர்த்து சமரசமின்றி போராடி வருகிறது. நடந்து முடிந்த நாடாளு மன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்ததது. மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மகத்தான வெற்றி பெற்றதை நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வரவேற்று பாராட்டியுள்ளன.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளையும், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டது உட்பட மாநில உரிமைகளை பறிக்கும் ஜனநாயக விரோதக் கொள்கைகளையும், இந்தி மொழி திணிப்புப் போன்ற அத்துமீறல்களையும் எதிர்த்துப் போராடி வருகிறது. கொள்கைகளை மதச்சார்பற்ற ஜனநாயக, இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைந்தும், தனித்தும் போராடி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வரும் அக்டோபர் 21, 2019 நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தி.மு.கழகம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் பாடுபடுவது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு முடிவு செய்துள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் தி.மு.கழகம், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.