வெளிநாட்டு இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்கிறார் இரா.முத்தரசன்

கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பெருந்தொற்று பரவலால் உலகின் எல்லா நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நோய் தொற்றுக்கு ஜாதி, மதம், மொழி, இனம், நாடுகள் என எந்த எல்லைகளும் இல்லை என்பதை உணர்த்து கொள்ள வேண்டும். ஆனால் பாஜக மத்திய அரசு, கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் தப்லீக் ஜமாத்தார் மாநாட்டில் கலந்து கொள்ள புது டெல்லி வந்த முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி, அவர்களில் பலரைக் கைது செய்து பல்வேறு சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் புழல் மத்திய சிறையில் 9 நாடுகளைச் சேர்ந்த 14 பெண்கள் உட்பட 129 வெளிநாட்டு முஸ்லிம்கள் விசாரணை கைதிகளாக வைக்கப் பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம் 92 பேர்களை பிணையில் விடுவித்துள்ளது. பிணையில் விடுதலை பெற்றுள்ள வெளி நாட்டு விசாரணை கைதிகளுக்கான நடைமுறை விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் அப்பட்டமாக மீறப்படுகிறது.

இது தொடர்பாக ஜூன் 12 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை “கொரானா நோய் பெருந்தொற்று பரவலுக்கு இவர்கள் தான் காரணம் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்பதை உறுதி செய்து, அவர்களை, அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது. இவர்கள் நாடு திரும்பும் வரையில் இவர்களை வண்ணாரப்பேட்டை அரபிக் கல்லூரியில் அல்லது வசதியான வேறு இடத்தில் தங்க வைக்க வேண்டும். புழல் சிறையில் வைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவை அஇஅதிமுக அரசு அலட்சியம் செய்து விட்டு, ஆன்மீகப் பயணம் வந்த வெளிநாட்டு முஸ்லிம்கள்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து அவரவர் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. என்று முத்தரசன் கூறியுள்ளார்.