அஞ்சலக தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் – மத்திய அரசின் உத்தரவை மாநில தபால் துறை அதிகாரிகள் மதுரை எம்.பி சு.வெங்கடேசனை நேரில் சந்தித்து வழங்கினர்

அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு ஆகியன தமிழிலும் நடத்தப்படும் என்று அஞ்சல் சேவை வாரியத்தின்(ஊழியர் நலன்) உறுப்பினர் சந்தோஷ் குமார் கமிலா நேற்று கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார். மேலும் இம்முடிவினை நேரடியாகவும் சென்று தெரிவிக்குமாறு தமிழ்நாடு அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் தமிழ்நாடு சர்க்கிளின் முதன்மை மாநில தபால் துறை அலுவலர் திரு.பி.செல்வகுமார், மதுரை மாவட்ட தபால் துறை அலுவலர் ஜி. நடராஜன் ஆகியோர் இன்று எனது அலுவலகத்திற்கு வந்து என்னை சந்தித்தனர். அஞ்சலக தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என்கிற எனது கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சகத்திற்கு அவர்களின் வாயிலாக எனது நன்றியினை தெரிவித்துக்கொண்டேன். கடிதம் வாயிலாகவும் மத்திய அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளேன்.

அஞ்சல் துறைக்குட்பட்ட தேர்வுதான் இதுவரை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது, இனி இத்தேர்வுகளும் தமிழிலும் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். துறை ரீதியான தேர்வுகள் என்றாலும் கிராமப்புற பிற்படுத்தப்பட்ட பகுதியினைச் சார்ந்தவர்களுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தேன். இத்தேர்வுகளுக்கான கருவி நூற்களைத்(Study Material)தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி அவரிடம் கடிதம் வழங்கினேன். மத்திய அமைச்சருக்கும் இக்கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன். எனது கோரிக்கையை ஆவணச் செய்வதாக கூறியுள்ளார். இதுபோன்றே மத்திய அரசின் பல துறைகளில் அனைத்து மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படுவதற்கும் அத்தேர்வுகளுக்கான கருவி நூற்களை தமிழில் உருவாக்கப்படுவதற்கும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கருதுகிறேன். இவ்வாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.