அம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு, இலங்கை அரசு குத்தகைக்கு விட்டிற்பது தமிழகத்திற்கு ஆபத்தாகுமென இந்திய அரசுக்கு வலியுறுத்த சொல்கிறார் செல்வப் பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர்  கு.செல்வப்பெருந்தகை அவர்கள் விடுக்கும் அறிக்கையில், காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சில மாதங்களுக்கு முன்பு சீன ராணுவத்தினர் அத்துமீறி நம் எல்லைக்குள் நுழைந்து நம்முடைய 20 இராணுவ வீரர்களை கொலை செய்தார்கள். நம் நாட்டின் பாதுகாப்பிற்கு இதன் மூலம் ஏற்பட்ட பெரிய அச்சுறுத்தலைக் கண்டு இந்திய திருநாடே துக்கத்திலும், மீளாத துயரத்திலும் ஆழ்ந்தது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நமது எல்லைக்கோட்டை பாதுகாக்காமல் வேடிக்கை பார்த்ததுதான் இவ்வளவு பெரிய இழப்பிற்கு காரணம். தற்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் இருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம், மற்றும் அதையொட்டிய 15,000 ஏக்கர் நிலங்களை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை அரசு வழங்கியது. ஆனாலும் கூட அப்பகுதிகளை ராணுவம் உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகளை இலங்கை அரசு சீனாவுக்கு விதித்திருந்தது. ஆனால், இப்போது ஒட்டுமொத்த இலங்கையும் ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியின் கீழ் வந்துவிட்டதால் அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ள 660 ஏக்கர் நிலப்பகுதியை சீன இறையாண்மை கொண்ட பகுதியாக அறிவிப்பதற்கான சட்டம் அண்மையில்இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இலங்கை அரசு அலுவல் மொழிகளிலும், தமிழ் மொழியை புறந்தள்ளிவிட்டு, சீன மொழியான ‘MANDARIN’ மொழியை அலுவல் மொழியாக அறிமுகப்படுத்தியும் சீனாவின் கரன்சியையும் (YUAN) இலங்கை அரசு திட்டமிட்டே புழக்கத்தில் விட்டிருக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும்; அதன்மூலம் இந்தியாவைக் கண்காணிக்க வேண்டும் என்பது சீனாவின் நீண்டநாள் கனவு ஆகும். இப்போது அதை சாதித்துக்கொண்டது மட்டுமின்றி, அப்பகுதிக்கு இறையாண்மை அந்தஸ்தையும் பெற்றிருப்பதால் அங்கு கடற்படை தளத்தைக் கூட சீன அரசு எதிர்காலத்தில் அமைக்கும். இலங்கை அரசே நினைத்தால் கூட இனி அதைத் தடுக்க முடியாது. இலங்கையிலிருந்து சீனா மூலமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அச்சுறுத்தலுக்கு இலங்கையுடனான இந்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைதான் காரணமாகும். கடந்த 7 வருடமாக பாஜகவின் மோடி அரசு இவ்வளவு தூரம் சீனா ஆக்கிரமிப்பு செய்ததற்கு ஒரு எதிர் நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது ஏன் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி அடைந்து இருக்கிறது. இது நம்முடைய இந்திய திருநாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் அமைந்திருக்கிறது.  சீனாவால் இன்னொரு கல்வான் போன்ற சம்பவம் தமிழகத்திலும் ஏற்படுவதற்குள் மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்தி வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.