அரசியலுக்கு எங்களை கொண்டு வந்ததே சினிமாதான் என்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் சக்திசிதம்பரம் இயக்கியுள்ள படம் பேய்மாமா. யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா அவர்களை வணங்குகிறேன். இங்கு பேசியவர்கள் இந்த அரசு சினிமாத்துறைக்கு நிறைய செய்கிறது என்று சொன்னார்கள். என்னை அம்மா நியமித்ததே அதற்காகத்தான். செய்தி விளம்பரத்துறை என்பது பெரிய ஜாம்பவான்கள் வசித்த துறை. நாங்கள் எல்லாம் படம் பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள். நாங்கள் அரசியல் படித்ததே தியேட்டர்களில்தான். எம்.ஜி.ஆர் இறந்து போவது போல வரும் ஐந்து படங்களைத் தவிர அவரது மற்ற எல்லாப்படங்களையும் 30 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன். ஆக சினிமாவும் தியேட்டர்களும் எங்களுக்கு முக்கியமானது. இந்தக் கொரோனா நிறைய விசயங்களை முடக்கிப் போட்டுள்ளது. கொரோனா கண்ணுக்குத் தெரியாத வைரஸ். அதேபோல் பேயும் கண்ணுக்குத் தெரியாத. ஆனால் அந்தப்பேயை பேய்மாமா என்று ரசிக்குற படி படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். இந்தப்பேய் மாமா கொரோனாவை விரட்டும் என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் ரொம்ப சந்தோசம். உலக அளவில் இந்தப்படத்திற்கு விருது கிடைக்கும். பேய் இருக்கா இல்லியா என்று தெரியாது. ஆனாலும் பேய் என்றால் பயம் தான். பேயை சப்ஜெக்டாக வைத்து கொரோனாவை ஒழிப்பேன் என்ற தீம் நல்ல தீம். ஷக்திசிதம்பரம் நல்ல சாதுர்யமானவர். அவர் எடுத்த நிறைய நல்ல படங்கள் உண்டு. இந்தப்படம் ரொம்ப நல்லா வந்திருப்பதாகச் சொன்னார்கள். என்னதான் ஓடிடியில் படம் பார்த்தாலும் தியேட்டரில் படம் பார்ப்பதுதான் சுகம். வீக் என்ட் என்றாலே தியேட்டர் தான் எண்டெர்டெயின்மெண்ட். அதனால் பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி பயப்பட வேண்டாம். சீரியல் முதற்கொண்டு சினிமா சூட்டிங் வரை எல்லாத்திற்கும் அனுமதி படிப்படியாக கொடுத்தோம். அதேபோல் சினிமா தியேட்டர் திறப்பது பற்றி ஓரிரு நாட்களில் நல்ல முடிவுகளைச் சொல்வோம். இந்தப் பேய்மாமா படம் வெளிவரும் போது நிச்சயம் தியேட்டர்களில் கூட்டம் வரும். அதனால் யோகிபாபு ஷக்திசிதம்பரம் படத்தின் தயாரிப்பாளர் யாரும் கவலைப்பட வேண்டாம். கோவா பிலிம் பெஸ்டிவெலில் நமது தமிழ்ப்படங்களும் திரையிடப்படுவதைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும். நான் வருடம் வருடம் அங்கு போவேன். நம் படங்களுக்கு அங்கு நல்ல மரியாதை இருக்கிறது. பேய்மாமா வித்தியாசமான கதைக்களம் உள்ள படம் என்பதால் இந்தப்படமும் கண்டிப்பாக பெஸ்டிவெலில் பேசப்படும். அதனால் யோகிபாபு இண்டெர்நேஷனல் ஸ்டார் ஆகிடுவார். இந்தப்படம் நல்ல சுவாரசியமா இருக்கும். எல்லாத் துறைகளைப் போல இந்தச் சினிமாத்துறையும் தன்னிறைவு பெற்ற துறையாக விளங்கும்.” என்றார்.

நடிகர் யோகிபாபு பேசியதாவது: ஷக்தி சிதம்பரம் சார் இந்த மேடையில் என்னை கதாநாயகனா நிற்க வச்சிட்டார். ரொம்ப பயமா இருக்கு. இந்தப்படம் முதலில் வடிவேல் சாருக்கு தான் பண்ணியது என்று ஷக்தி சார் சொன்னார். உடனே நான் “சார் வடிவேல் சார் ஜீனியஸ் சார். அதனால் எனக்கு எப்படி சார் செட்டாகும்”னு கேட்டேன். இந்தப்படம் வெற்றி அடைய உங்கள் எல்லாரோட ஆதரவும் அன்பும் வேணும். நான் சம்பள விசயத்தில் பெரிய கறார் கிடையாது சார். என் மேனஜரிடம் வேண்டுமானால் கேளுங்க. சமீபத்தில் கூட ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் பொண்ணு. ஒரு கதைப் பண்ணிருக்கேன் நீங்க பண்ணிக் கொடுக்கணும். ஆனால் என்கிட்ட பட்ஜெட் இல்ல. இந்தப் படம் நடந்தா தான் சார் எனக்கு கல்யாணம் நடக்கும்னு சொல்லிச்சு. நான் உடனே “ப்ரீயா நடிச்சித் தர்றேம்மா உனக்கு முதல்ல கல்யாணம் நடக்கட்டும்” என்று சொன்னேன். இப்படி நிறைய அட்ஜெஸ்மெண்ட் பண்ணிட்டு தான் இருக்கேன். சக்தி சிதம்பரம் சார் டயலாக்கில் நிறைய சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன். படத்தின் ட்ரைலரில் சொன்ன மாதிரி நான் காமெடியன்தான் காமெடியன்தான். அனைவருக்கும் நன்றி” என்றார்

.