ஆரம் மலர் (Sandalwood).

மறைத்தாலும் மறவாது மணப்பேன், ஆம் என் பெயர் ஆரம் எனும் சந்தன மலர். மரவகையில் கோட்டுப்பூவாக, மலைமரத்தால் குறிஞ்சியாக, வேனிலில் பூப்பதாக வெண்மைப் பூவாக அமைந்தேன். மணப்பூச்சிற்கு சிறப்புள்ள மரத்தின் பூ நான். காடுகளில் வளர்ந்தாலும், வீடுகள், நாட்டினிலும் வளர்வேன். சந்தனத் தைலம், சந்தனக்கட்டை, கைவினைப்பொருளாக, அலங்காரப் பொருட்களாக அணிவகுத்து மணப்பேன். தோலில் உண்டாகும் சொறி, சிறங்கு, வேர்க்குரு, பருக்களுக்கு நானே நல்ல மருந்து. வாயுக் கோளாறு, வெப்பத்தாக்கம், அதிக தாகம், சீதபேதி, வயிற்றுக்கடுப்புகளுக்கு சந்தனத் தண்ணீராக நல்ல பலனளிப்பேன். எனக்கு இத்துணை சிறப்பிருக்கும்போது, என்னை எப்படி கவிஞர் கபிலர் மறப்பார்? ஆதலால்தான் குறுஞ்சிப்பாட்டு 99 மலர் ஆரத்தில் 91வது மலராக ‘ஆரமாக’ விளங்குகிறேன். இதற்குமேல் என்னை நீங்கள் அறிய வேண்டுமானால் உங்கள் ஊர் வீரப்பன் நாட்குறிப்பில் பாருங்களேன். சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து, என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங்காத்து.. காற்றில்ல, காத்து

– வே. அரசு. பெங்களூர்.