உண்மை அறியாத செய்தி பதிவுகளால் பலருக்கு ஏற்படும் வேதனை திறந்த மனதுடன் பேசுகிறார் சரத்குமார்

கொரோனா தொற்று 2019 உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் போது, பொருளாதார ஜாம்பவான்களை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் துன்புறுத்தலால் மரணித்திருக்கும் போது, நான் தற்போது எழுத விழைந்திருப்பது தேவை தானா, இல்லையா என்ற தடுமாற்றத்தில்…..அல்ல, அல்ல, சஞ்சலத்தில் என் மனதில் தோன்றிய, சில உண்மையாக நிகழ்கின்ற அவல நிலைகளை சொல்லியே ஆக வேண்டும் என்று எழுத முனைகிறேன். என் நெஞ்சத்தின் அடித்தளத்தில் இருந்து… இதோ… செய்தி…

மக்கள் தொடர்பு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புறா விடும் தூதாக ரோமாபுரியில் துவங்கி, 1605 ஜெர்மானிய "The Relation" பத்திரிக்கை, 1890 ல் மார்க்கோனியின் ரேடியோ கண்டுபிடிப்பு, 1927 ல் Philo Taylor Farnsworth இன் தொலைக் காட்சி கண்டுபிடிப்பு, 1990 ல் 24 மணி நேர தொலைக்காட்சி தொடர்பு, 1995 – The American Reporter என்ற முதல் இணையதள 24 மணி நேர செய்திகள் என பல வடிவங்களில் உலகின் நடப்புகளை மக்கள் அறிந்து கொள்ள உருவாகிய தொடர்புகள் இவை.
எதற்காக இவற்றையெல்லாம் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் வியக்கலாம். காரணம் இல்லாமல் இல்லை. செய்திகளின் தரம், பிரசுரிப்பவர்களின் நேர்மை, அறிந்து கொள்வதில் உண்மையான தாக்கம். இவைகளெல்லாம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என போற்றப்படும் செய்தி குழுமத்தின் நிலையாக இருக்க வேண்டும். நான் கணிதம் பயின்றுவிட்டு சைக்கிளில் சென்று பத்திரிக்கை விநியோகம் செய்கின்ற இளைஞனாக வாழ்க்கையை துவங்கி, சைக்கிள் பழுது பார்ப்பவனாக (அதிக நேரம் இருந்த காரணத்தினால்), பத்திரிக்கை நிருபராக, பயண நிறுவனம் நடத்துபவனாக, திரைப்பட தயாரிப்பாளராக, நடிகனாக, சமூக சேவகனாக,பிறர் நலம் விரும்பியாக, அரசியல்வாதியாக பயணித்த அனுபவத்தில் எழுதுகிறேன்.

தரமான, நேர்மையான பத்திரிக்கை தொலைக்காட்சிகள் இணையதளம் நடுவே ஒரு சில இணைய தள செய்திகள் தருகின்ற சகோதரர்களுக்கு, தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகளை காட்டுத்தீ போல் பரப்புவதில் நீங்கள் அடையும் மகிழ்ச்சி, உங்கள் தவறான, ஆய்வு செய்யாத, உண்மை அறியாத செய்தி பதிவுகளால் பலருக்கு ஏற்படும் வேதனை, அவர்கள் அடையும் துயரங்களில் நீங்கள் அடையும் மகிழ்ச்சி,
ஆஹா, பரபரப்பாக செய்திகள் வெளியிட்டு விட்டோம், பலரிடம் நம் பதிவு சென்றடைந்து விட்டது, நினைத்ததை சாதித்து விட்டோம், ரேட்டிங் (Rating) உயர்ந்து விட்டது, வசூல் அபாரம் என்ற மகிழ்ச்சி, உங்களுக்கெல்லாம் உணர்வுகளே கிடையாதா? மனசாட்சி என்பதை இறக்கி வைத்து விட்டீர்களா? பேனா முனையின் வலிமையை எதற்கு பயன்படுத்த வேண்டும், உங்கள் அறிவை ஆக்க சக்தியாக மாற்ற
வேண்டும் என்ற உணர்வே உங்களை போன்றவர்களுக்கு கிடையாதா? உங்களை போல பதிவிட்ட செய்தி உண்மையா, இல்லையா என தெரிந்து கொள்ளாமல் Social Media என்ற சக்தியை, ஆயுதத்தை, மற்றவர்களும் ஆனந்தத்தோடு பகிர்வது, கருத்து தெரிவிப்பது "Excite the public rather than Inform" என்ற மஞ்சள் பத்திரிக்கை களுக்கு சவாலாக நீங்களெல்லாம் இருப்பதில் வேதனை அடைகிறேன், வெட்கப்படுகிறேன். நான், என் குடும்பம், என் வாழ்க்கைப்பயணம் உங்களை போன்றவர்களுக்கு சற்று எரிச்சலாகத்தான் இருக்கும். ஒருவன் என்று வீழ்வான் என்று காத்து கொண்டிருக்கும் கூட்டமாயிற்றே நீங்கள்.

உழைத்து வாழ்கிறவனின் ஏற்றம் வேதனை தான் தரும். சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்று நினைக்கத்தான் தோன்றும். என் வாழ்க்கையின் சோகங்கள், வேதனைகள், தாய், தந்தையரின் இழப்பு, சகோதரரின் இழப்பு, பொருளாதார பின்னடைவு, தோல்வி கள், அவதூறுகள் இவைகளெல்லாம் தாங்கி வாழ்க்கை என்பது வாழ்வதற்கே, வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும், அதிலும் நியாயத்திற்கும், தர்மத்திற்கும்
கட்டுப்பட்டு பிறர் வீழ்ச்சியில் அல்ல, என் முயற்சியில் இருக்க வேண்டும் என்று பயணிப்பவன் நான். என் பயணத்தின் எல்லை, இலக்கு, இவைகளை நன்கு அறிந்தவன் நான். விடாமுயற்சி, தடைகற்களை உடைத்தெறியும் வலிமை, என் தமிழ் உறவுகளின் ஆதரவு, என்னை வெற்றி பெற செய்யும் – பிறர்நலனுக்காக – நம் மக்களுக்காக. தவறான பதிவுகளுக்கும், செய்திகளுக்கும் மறுப்பு தெரிவித்தால், அதையும் செய்தியாக்கி பொருளாதார உயர்வு பெற விரும்பும் உங்களுக்கெல்லாம் அந்த மகிழ்ச்சியையும் நான் தரவிரும்பவில்லை. ஜாதி, மத, மொழி, இனம், நிறம் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட சமத்துவ சமுதாயம் படைப்போம். இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.