உயர்கல்வியில் வெறுப்புணர்வை தூண்டும் பாடத்திட்டம்: நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு!. ம.ம.கட்சியின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை!

சென்னை 21, மே.:- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை கழகத்தின் எம்.ஏ. அரசியல் அறிவியல் முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தில் சிறுபான்மையினர் குறித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பொதுவுடமைக் கட்சிகள் குறித்தும் அவதுரான விஷயங்களையும், உண்மைக்குப் புறம்பான விஷயங்களை இட்டுக்கட்டி பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக, இந்தியாவில் முஸ்லிம்களின் நம்பிக்கைகளும் அவர்களின் வாழ்க்கை முறையும் தான் வகுப்புவாதத்திற்கான காரணங்கள் என்றும் , 71 ஆண்டுகள் பாரம்பரியமிக்க திராவிட முன்னேற்றக் கழகம், முஸ்லிம்களை வாக்கு வங்கியாகப் பயன்படுத்துவதாகவும், சிறுபான்மையினரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இடதுசாரி கட்சிகள் மீது இதே விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாண்புமிகு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் கவனத்திற்கு நான் கொண்டு சென்றேன். உயர்கல்வி துறை அமைச்சர் அவர்கள் இதுகுறித்து விசாரித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இப்பாட நூலை தயாரித்தவர்கள் மீது தமிழக முதலமைச்சரை கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அனைத்து பல்கலைகழக நூல்களையும் ஆய்வு செய்ய ஆலோசித்து குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..

பாட புத்தகத்திலிருந்து இந்த விஷம கருத்துகளை நீக்க வேண்டும் என்ற மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்களின் பாடத்திட்ட கையேடுகளைத் தயாரிக்கின்ற போது உயர்கல்வியின் மேன்மையான கோட்பாடுகளை அடையும் வகையில் தரத்தினை உயர்த்திட வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலத்தில் பாடத்திட்டக்குழுவில் ஃபாசிச அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட தகுதியான கல்வியாளர்களை இணைக்க வேண்டும், மதவெறிச் சிந்தனை கொண்டவர்களை நீக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.