சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு: 5 மாதங்களுக்குப் பின் பக்தர்களுக்கு அனுமதி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும் 16-ம் தேதி திறக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மலையாள மாதப் பிறப்பின்போது பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் பூஜைகள் நடத்தப்படும். பின்னர் நடை அடைக்கப்படும். அந்த வகையில் வரும் 16-ம் தேதி மலையாள மாதமான துலாம் மாதம் பிறப்பின்போது கோயில் நடை திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்கள் பக்தர்களுக்கு சபரிமலை செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு மாதப் பிறப்பின்போதும், பக்தர்கள் இன்றி கோயில் ஊழியர்கள், நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

இந்நிலையில் மாதப் பிறப்பின்போது சபரிமலைக்கு பக்தர்களைத் தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் வரும் 16-ம் தேதி மாதப் பிறப்பின்போது, பக்தர்களை அனுமதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 5 மாதங்களுக்குப் பின் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கடும் கட்டுப்பாடுகளுடன் நாள்தோறும் 250 பக்தர்களை மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி வரும் 16-ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் எந்தப் பூஜையும் நடைபெறாது. 17-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் வருகையை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிடவும், கேரள ஆயுதப்படையின் 5-வது கமாண்டன்ட் கே.ராதாகிருஷ்ணன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பத்தனம்திட்டா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், ஆயுதப்படையின் 3-வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆகியோரும் துணையாக இருப்பார்கள்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கடும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. கண்டிப்பாக கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும், முகக்கவசம், சமூக விலகலைப் பின்பற்றுதல் போன்ற கட்டுப்பாடுகள் தீவிரமாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் 250 பக்தர்களை மட்டும் அனுமதிக்கப்படுவர். வடசேரிகரா மற்றும் எரிமேலி ஆகிய பகுதிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மற்ற வழியாக அனுமதிக்கப்படமாட்டார்கள் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.