திருஞானசம்பந்தர்

திருமயிலையைப் பற்றியும் கபாலீஸ்வரரைப் பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய மட்டிட்ட புன்னையங் கானல் என்று தொடங்கும் பதிகமாகும். இப்பதிகத்தைப் பூம்பாவைப் பதிகம் என்றும் கூறுவர். திருஞானசம்பந்தர் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்தராவார். திருஞானசம்பந்தர் பாடிய பூம்பாவைப் பதிகத்தில் பதினொரு பாடல்கள் உள்ளன. முதல் பத்துப்பாடல்கள் பூம்பாவையை அழைக்கும் முறையில் அமைந்துள்ளன. பதினோராம் பாடல் பதிகத்தின் பயனைக் கூறுகிறது. இப்பதிகத்தில் மயிலைத் தலம் பற்றியும் மயிலையில் நடைபெறும் விழாக்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. கி.பி.ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ அரசர் தாம் பாடிய சிவத்தளி வெண்பாவில், மயிலைத் திருபுன்னையங்கானல் சிந்தியாயாகில் இருப்பின்னை யங்காந்திளைத்து என்று மயிலைக் கபாலீஸ்வரர் கோயிலைக் குறிப்பிடுகிறார்.

தேவாரம் பாடிய மூவரும் தங்கள் பாடல்களில் மயிலையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். நந்திக்கலம்பகமும் நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியும் கலிங்கத்துப்பரணியும் பெரிய புராணமும் திருப்புகழும் மயிலையில் பெரும்புகழினைச் சிறப்பித்துப் பாடுகின்றன. திருஞானசம்பந்தர் கூறும் விழாக்களும் விரதங்களும் பெருஞ்சொற்று விழா ஐப்பசி திங்களில் ஓண நட்சத்திரத்தில் நடைபெறும் விழா, கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நட்சத்திரத்தில் தொன்றுதொட்டுக் கொண்டாடும் விளக்கீட்டு விழா, மார்கழித் திங்கள் ஆதிரை நாளில் நடைப்பெறும் திருவிழா, தைத் திங்கள் பூச நாளில் கொண்டாடப்படும் திருவிழா, மாசித் திங்கள் மக நாளில் நடத்தப்படும் கடலாட்டு விழா பங்குனி உத்திரத் திருவிழா, அட்டமி நாள் விழா பொற்றாப்பு விழா பெருஞ்சாந்தி ஆகிய விழாக்கள் கபாலீஸ்வரர் கோயிலில் கொண்டாடப்பட்ட செய்தியினைத் திருஞானசம்பந்தர் பூம்பாவைப் பதிகத்தில் பத்துப் பாடல்களில் கூறுகிறார். இவற்றுள் முதல் பாடலில் சிவ பக்தர்களுக்கு உணவிடும் விழாவைக் கூறுகிறார். அடுத்த பாடலில் ஐப்பசித் திங்களில் நடைபெறும் ஓணவிழா கூறப் பெறுவதால் இதுவும் ஐப்பசித் திங்களில் நடைபெற்றிருக்கக் கூடும்.

ஐப்பசி ஓண விழாவிலும் சிவ பக்தர்கள் உண்டு களித்தல் கூறப்படுகின்றது. ஐப்பசி விழா ஸ்ரீராமனால் கொண்டாடப்பட்ட செய்தியினை வடமொழிப் புராணம் 9வது அத்தியாயத்தில் 32, 33, 34 வது சுலோகங்களில் கூறப்படுகிறது. ஐப்பசி ஓணத்தில் கொடியேற்றிக் கிருத்திகையில் தீர்த்தம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. தமிழ்ப் புராணத்தில் ஐப்பசி ஓணத்தைப் பத்தாவது நாள் தீர்த்தமாகக் கொண்டு விழா ஸ்ரீராமரால் நடத்தப்பட்ட செய்தி கூறப்படுகிறது என்று ம. பாலசுப்பிரமணிய முதலியார் குறிப்பிட்டுள்ளார். கார்த்திகை விளக்கீடு, ஆதிரை நாள், தை பூசம், மாசிக் கடலாட்டு, பங்குனி உத்திரம் ஆகிய ஐந்தும் இன்றும் தமிழ் நாடெங்கிலும் கொண்டாடப்படுகின்றன. மயிலையிலும் விசேடமாயிருந்தன. இன்றும் விசேடமாகவே உள்ளன. அட்டமி நாள் என்பது சிவ விரதங்கள் எட்டினுள் ஒன்று வைகாசித் திங்கள் சுக்கில பட்சம் அட்டமி நாளையே பதினெண்கணங்கள் தம் அட்டமி நாள் என்று சம்பந்தர் குறிப்பதாகக் கொள்வதே சிறந்ததாகும். பொற்றாப்பு (பொன் தாம்பு = பொன் ஊசல்) என்பது மார்கழி திங்களில் சிவன் கோயில்களில் மூன்று ஏழு அல்லது பத்து நாட்கள் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தைக் குறிக்கும் என்பர். பெருமானையும் பிராட்டியையும் ஊசலில் வைத்துப் பொன்னூசல் திருவெம்பாவை முதலியன ஓதுவதுண்டு.

பெருஞ்சாந்தி என்பது ஆவணி அவிட்டம் ஈறாக மூன்று ஐந்து அல்லது ஏழு நாட்களில் சிவயாகம் முதலிய சிறப்புடன் நடக்கும். பவித்ரோத்சவமாகிய சம்வத்சர என்பர். போதிய வருவாயுள்ள சிவாலயங்களிலெல்லாம் இதை நடைபெறும். மயிலையில் மூன்று நாள் சிறப்பாக நடக்கிறது. குடமுழுக்கு என்றும் சிலர் இதைக் கருதுவதுண்டு. இவையே திருஞானசம்பந்தர் கூறும் திருவிழாக்களாகும்.