தமிழகத்தில் நலிந்து வரும் கரும்பு விவசாயத்தை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாகை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. மகசூலில் போதிய வருவாய் கிடைக்காததாலும், சர்க்கரை ஆலைகளின் நிலுவைத் தொகை அலைக்கழிப்பாலும், கரும்பு சாகுபடியை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கரும்பு பயிரிடும் பரப்பளவு குறைந்து வருவதால், சர்க்கரை ஆலைகள் மூடப்படுகிறது. விவசாயிகள் மட்டுமல்லாது இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் பலரும் வேலையிழந்து வருகின்றனர். தமிழகம் 42, புதுச்சேரியில் 2 என 44 சர்க்கரை ஆலைகளில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.1000 கோடி நிலுவைத்தொகை உள்ளது. இவற்றில் 10 ஆலைகள் மூடப்பட்டு விட்டன. மூடிய இந்த ஆலைகளும் கோடிக்கான ரூபாய்களை வழங்காமல் உள்ளன. இதன் காரணமாக, விவசாயம் செய்ய முடியாமலும், மருத்துவச் செலவு, குடும்பச் செலவுகளை செய்ய முடியாமலும் கந்துவட்டிக்கு பணம் வாங்கி விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கரும்பு பயிரிடுவதை விவசாயிகள் மீண்டும் தொடங்கவும், கடனில் தவிக்கும் சா்க்கரை ஆலைகளை மீட்கவும், மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற கரும்புக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க மத்திய அரசு முன் வர வேண்டும். கரும்பிலி ருந்து சர்க்கரை மட்டும் பிரதானமாக எடுப்பதோடு அல்லாமல் அதிலிருந்து எத்தனால் எடுப்பதையும் ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலைகளுக்கு அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

அதே நேரத்தில், எத்தனாலை மது உற்பத்திக்கு பயன்படுத்தாமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் எத்தனால் கலந்த எரிவாயுவை வாகனங்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, சர்க்கரை ஆலைகள் புத்துயிர் பெறுவதுடன், கரும்பு உற்பத்தி யையும் மீண்டும் அதிகரிக்க முடியும். சர்க்கரை ஆலைகளும் தொடர்ந்து இயங்க முடியும். மின்சாரம் உற்பத்தி செய்யலாம். வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். அரசு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு பெட்ரோலிய இறக்குமதியை குறைக்க முடியும். இதன் மூலமாக, பெட்ரோல் விலை உயர்வு பன்மடங்கு குறைக்க முடியும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, சர்க்கரை ஆலைகளில் எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.