மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம் – அமைச்சர் நித்தியானந்தா ராய்

மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொருளாதார அதிகாரமளித்தலும், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அவசியம் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்தா ராய் கூறியுள்ளார். சென்னை அருகே தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் காவல்துறையில் மகளிர் என்ற 11-வது தேசிய மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த மாநாடு காவல்துறையில் பணிபுரியும் மகளிரின் அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் சேவையை கவுரவிக்கும் வகையில் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார். இதுபோன்ற மாநாடுகள் நாடு முழுவதும் சட்டத்தை நடைமுறைப்படுத்துதலில் மகளிரின் பங்கை அங்கீகரிப்பதற்கும், பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கும் வழிவகுப்பதாக தெரிவித்தார்.

சமூகத்தில் மகளிரின் பங்களிப்பை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவற்றில் அதிக அளவில் பெண் காவல் அதிகாரிகளை பணியமர்த்துதல் மற்றும் நாடு முழுவதும் பெண்களுக்கான தனி காவல் நிலையங்களை நிறுவுதல் ஆகியவை அடங்கும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கடன் வசதிகள் மற்றும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு போன்றவை அடங்கும் என்றார். இன்றைய மாநாட்டு தலைப்புகளில் ‘பெண் காவல்துறை மற்றும் அதிகாரம் அளித்தல்’ என்பது மிகவும் பொருத்தமானது. காவல்துறையில் பணிபுரியும் மகளிர் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதே சமயம், அவர்கள் பிற பெண்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரிகளாகவும் திகழ்கின்றனர் என்று குறிப்பிட்டார். பெண் காவலர்களின் அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் சேவையை கவுரவிக்கும் வகையில் காவல்துறையில் பெண்கள் பதினோராவது தேசிய மாநாட்டை சென்னை  வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து தமிழக காவல்துறை இந்த மாநாட்டை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள 140 பெண் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். மேலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் மத்திய அமைப்புகளில் பணியாற்றும் பெண் காவல்துறை அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்று கருத்துக்கள், சவால்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து உரையாடினார்கள்.  மேலும் இந்த மாநாட்டில் பணியாளர் சேர்ப்பு, பயிற்சி, சீருடை, தொழில் முறை வளர்ச்சி, தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே சமநிலை, நல்வாழ்வு மற்றும் மன ஆரோக்கியத்திற்கான நடவடிக்கைகள், மகளிருக்கு அதிகாரம் அளித்தல் குறித்த யோசனைகளும் தொலைநோக்கு பார்வைகளும், ஆட்கடத்தலை தடுப்பதில் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றை விவாத தலைப்பாக வைத்து பெண் காவல்துறையினர் உரையாற்றினர்கள். நகர்ப்புற மற்றும் கிராமப்புற சூழல்களில் பெண்கள் மேம்பாட்டுக்கான நடைமுறை அணுகுமுறைகளை மையமாகக் கொண்ட பயிலரங்குகளுடன் இந்த மாநாடு நடைபெற்றது.