அங்கீகரிக்கப்படாத வாடகை வாகனங்கள் மீது தாம்பரம் மாநகரப் போக்குவரத்து காவல்துறை தீவிர நடவடிக்கை

தாம்பரம் மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையினர், பொத்தேரியில் உள்ள தனியார் வாகன வாடகை கடைகளில் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர். இச்சோதனையின்போது, முறையான அங்கீகாரமின்றி, பல இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதும், சட்டவிரோதமாக வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டன. தனியார் வாகனங்களை வணிக நோக்கத்துடன் உரிய அனுமதியின்றி வாடகைக்கு விடுவது சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, மோட்டார் வாகன விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட 93 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 16 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 109 வாகனங்களை தாம்பரம் மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், அங்கீகரிக்கப்படாத வாகன வாடகை நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காவும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று, தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர்  வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்ட விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.