எனாக்ஷி கங்குலியுடன் நட்பு இருக்கிறது – அருண் கார்த்தி

பவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பனிவிழும் இரவு’. அருண் கார்த்தி கதாநாயகனாகவும், எனாக்ஷி கங்குலி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் செ.ரா.ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில்  கதாநாயகன் அருண் கார்த்தி பேசியதாவது:  “என்னுடன் நடித்த எனாக்ஷி கங்குலி மிகவும் அருமையான சக நடிகை. நாங்கள் இருவரும் சில நேரங்களில் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போட்டுக் கொள்வோம்; ஆனால், எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. அவருக்குத் தமிழ் தெரியாத நிலையிலும், வசனங்களை மனப்பாடம் செய்து, அந்தக் கதாபாத்திரத்துக்காகத் தொடர்ந்து பயிற்சி எடுத்து மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.********

மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது. கஜராஜ் சார் மிகவும் எளிமையானவர். படப்பிடிப்பில் என்னை ஊக்கப்படுத்தி, பல விஷயங்களை அன்புடன் சொல்லிக் கொடுத்தார். கருப்பு நம்பியார் சார் இந்தப் படத்தில் ஒரு காவல் நிலையத்தையே உண்மையான இடம்போல மாற்றிவிட்டார். அவருடைய இயல்பான நடிப்பு நிச்சயமாகப் பேசப்படும். சேரன் ராஜ் சாரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். உறியடி சுருளி அண்ணன் சிறிய பட்ஜெட்டில் நல்ல கதையுடன் உருவாகும் படங்களுக்கு எப்போதும் ஊக்கம் கொடுப்பவர். சரவண சக்தி சார் ஏற்கெனவே இயக்குநராக இருப்பதால், அவருடன் நடித்தபோது ஒரு காட்சியை எப்படி மேம்படுத்தலாம் என்பதை நேரடியாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. சரண் அண்ணனும் எங்கள் படத்தைப் பார்த்துவிட்டு ஊக்கமளித்ததோடு, பத்திரிகைத் துறை சார்பாக எங்களால் முடிந்த அளவுக்கு ஆதரவு தருவதாகச் சொன்னார். இப்படி ஒவ்வொருவரும் இந்தப் படத்துக்கு அளித்த ஆதரவும் பங்களிப்பும் எனக்கு மிகவும் முக்கியமானது.

இறுதியாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு நொடி படத்தின் போது என்னைப் பற்றி நீங்கள் எழுதிய நல்ல விமர்சனங்களும், கொடுத்த ஆதரவும் எனக்குப் பல வாய்ப்புகளைப் பெற்றுத்தந்தன. அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. அதேபோல, பனிவிழும் இரவு படத்தையும் நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை மட்டும் உங்கள் விமர்சனங்களில் வெளிப்படுத்தாமல் இருந்தால், அது படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும். இந்தப் படம் அக்டோபர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குக்கு வந்து படத்தைப் பாருங்கள். இதைச் சிறிய படம் என்று சொன்னாலும், கதைக்குத் தேவையான அனைத்தையும் எங்களால் முடிந்த அளவுக்கு முழுமையாகச் செய்திருக்கிறோம். விளம்பரப் பணிகளிலும் எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்திருக்கிறோம். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பும் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நன்றி, வணக்கம்!

இயக்குநர் செ.ரா. ராஜேஷ் பேசியதாவது.., என்னை ஈன்றெடுத்த என் தாய், தந்தையையும், என்னைக் கலை உலகத்துக்கு அழைத்து வந்த கலைத்தாயையும் வணங்கி, முதலில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்தை உருவாக்குவதற்குப் பல சிரமங்களைச் சந்தித்திருக்கிறோம். ஒரு திரைப்படத்தை எடுப்பதைவிட, அதை வெளியிடுவதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்கள் இன்னும் அதிகம். குறிப்பாக, கடந்த 30 நாட்களாக நாங்கள் அனுபவித்த சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்தச் சூழலில் எனக்குப் பக்கபலமாக இருந்த தயாரிப்பாளர் சதா முருகன் அண்ணனுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் சினிமாவுக்கு ஒரு நடிகனாக வர வேண்டும் என்ற ஆசையில்தான் வந்தேன். இதுவரை சுமார் 15 சிறிய படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் சில வெளியாகியுள்ளன; சில படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன. நான் முதன்முதலில் சதா முருகன் அண்ணனிடம் சொன்ன கதை பகையாறு. அந்தப் படம் தற்போது வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறது. அதற்கிடையில், பனிவிழும் இரவு படத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கதையைப் பற்றி நாங்கள் விவாதித்தபோது, இது எதிர்காலத்தில் நிஜமாகக்கூடிய ஒரு விஷயம் என்பதால், தாமதிக்காமல் படமாக்கலாம் என்று சதா முருகன் அண்ணன் ஊக்கமளித்தார். அவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.