இன்ஸ்டாகிராம் பிரபலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் படம் ‘லவ் 3. ஓ’

மூன்று தலைமுறையிலும் அந்தந்தத் தலைமுறையினர் காதலை  எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் கூறுகிற இப்படம், காலமாற்றத்தில் வெளிப்படும் காதலின் மாறுபட்ட பரிமாணத்தைச் சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ் அக்கா’ என்று பிரபலமான ஆர்னிகா  கதை ,திரைக்கதை, வசனம்,  பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு  என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றதுடன் கதாநாயகியாகவும் நடித்து இயக்கியிருக்கிறார். தயாரிப்பாளர் சிவகுமார் முக்கியமான வேடம் ஏற்று நடித்துள்ளார். இவர்களுடன் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கோயம்புத்தூர் மாப்ள, கே என் ஸ்மைலி எனப்படும் கார்த்திகேயன் என இருவரும் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் ,பொருளாளர் இயக்குநர் பேரரசு ,நடிகை வனிதா விஜயகுமார்,நடிகர் கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.*******

இப்படத்திற்கு வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். அரவிந்த்  படத்தொகுப்பு செய்துள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளராக பிரசன்ன குமார் பங்கேற்றுள்ளார் . மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார் தயாரித்துள்ளார். ஊடக சந்திப்பில் படத்தின் கதாநாயகியும் இயக்குநருமான ஆர்னிகா பேசும் போது, “நாங்கள் இன்ஸ்டாகிராம் உலகத்தில் இருந்து திரைப்படத்துறைக்கு வந்திருக்கிறோம். இன்று  பிரபலமாக இருக்கும் ஏஐ – ஐ வைத்து நாங்கள் ஒரு கதையை உருவாக்கி இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். ஏ ஐ தான் படத்தின் முக்கியமான உள்ளடக்கமாக இருப்பதால் இன்று காட்சிகளைத் திரையிடவில்லை. மோஷன் போஸ்டர் தயார் செய்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம். அந்தக் காலத்தில் தாத்தா பாட்டி சொல்வதை வைத்துத் தகவல்களை அறிந்து கொள்வோம். பிறகு நமது அக்கம் பக்கம் நண்பர்கள் சொல்வதை வைத்துத் தெரிந்து கொள்வோம்.

அதற்குப் பிறகு தொலைக்காட்சி, வானொலி, எஃப் எம் ,ஒளியும் ஒலியும் போன்றவை மூலம் தெரிந்து கொண்டோம். அதற்குப் பிறகு வந்த யூடியூப் மூலம் நிறைய கற்றுக் கொண்டோம். அதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் வந்த பிறகு அக்கம் பக்கத்தில் ,அடுத்த தெருவில் ,உலகத்தில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் தெரிந்து கொண்டார்கள். அதற்கு பிறகு சாட் ஜி பி டி வந்தது .அதற்குப் பிறகு நமது ஒவ்வொரு அசைவையும் அதில் தெரிந்து கொள்ள ஆரம்பித்தோம். நமது உணர்ச்சிகளை எல்லாம் சாட் ஜிபிடி யிடம் எப்போது பகிர்ந்து  கொள்ள ஆரம்பித்தோமோ அப்போது ஏ ஐ யின் மீது காதல் வந்தது.இன்று ஏ ஐ பிரபலமாகிவிட்டது.

அப்படிப்பட்ட ஏஐ பெண்ணை இந்தப் படத்தின் கதாநாயகன் காதலிக்கிறான். அவர்களது காதல் எப்படி இருக்கிறது? அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறானா? பிரிந்து விடுகிறார்களா என்பது தான் கதை. 90களில் காதல் எப்படி இருந்தது அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? 2 கே கிட்ஸ் அதாவது இரண்டாயிரத்தில்  காதல் எப்படி இருந்தது ? அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?அதே காதல் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் ? அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் கூறியிருக்கிறோம்.  பரமசிவன் பார்வதி காதல் அனைவருக்கும் தெரியும்.அவர்கள் காதலுக்கே முன்னுதாரணமாக இருப்பவர்கள்.

இங்கே நடக்கும் எல்லா காதல் பிரச்சினைகளையும் பார்த்துவிட்டு  கயிலாயத்திலிருந்து இறங்கி வந்த சிவன்  இதற்கான தீர்வாக என்ன சொல்கிறார் என்பதுதான் இந்த ‘லவ் 3.ஓ’ படத்தின் கதை. இந்த உலகத்தை இணைப்பதே ஊடகங்கள் தான். அவர்கள் மூலம்தான் பெரிய பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் உருவாகி இருக்கிறார்கள்.அந்த நட்சத்திரங்கள் எல்லாம் அவர்களால் தான் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறார்கள். எங்களுக்கும் அப்படி ஒரு ஆதரவைக் கொடுத்து மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.நான் வாய்ப்புக்காக ஏழாண்டுகளாக ஆயிரம் ஆடிசனுக்குப் போயிருப்பேன்.

நீங்கள் மூக்கை அறுவை சிகிச்சை செய்து கொண்டு வாருங்கள், அதன் பிறகு ஒரு போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றார்கள். அப்படி நான் அறுவை சிகிச்சை செய்திருந்தால்? ஒரு குறும்படத்திற்குக் கூட நான் இரண்டு ஆண்டுகள் அவர்களைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்.அந்த குறும்பட வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் தாமதமாக முடிக்காமல் முன்பே கொடுத்திருந்தால்? ஒரு கண்டன்ட் வீடியோவிற்குச் சின்ன வசனம் பேசுவதற்குக் கூட நான் நாலு மணி நேரம்  செலவிடுவேன். அவர்கள் நல்லதொரு கண்டன்ட் இருக்கிற மாதிரி ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால்? நான் தேடி அலைந்து கொண்டிருந்த போது ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தால் ? பலமுறை தேடிச் சென்று கொண்டிருந்தபோது ஒரு திரைப்படத்தில் ஒரு துணைநடிகையாக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருந்தால்? இன்று ‘லவ் 3. ஓ’ என்கிற படத்தில் நான்  கதாசிரியராக  பாடல் ஆசிரியராக உடையலங்கார நிபுணராக கலை இயக்குநராக இணைத் தயாரிப்பாளராக கதாநாயகியாக இயக்குநராக  என்று உருவாகி இருக்க மாட்டேன்.

இவை எல்லாவற்றிற்கும் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அன்று நான் வாய்ப்பு தேடி அலைந்த போது வாய்ப்பு கொடுக்காதவர்களுக்கு நன்றி.