மோடி அரசு 2014ல் பதவியேற்ற மே 26 ஆம் நாளை, இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாகக் கடைப்பிடிப்போம்! பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!! அனைத்து தொழிற்சங்க கூட்டறிக்கை

நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 26.05.2014 அன்று இந்திய ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததிலிருந்து, உழைப்பாளி மக்களுக்கும் வாக்களித்த பொதுமக்களுக்கும் எதிராகவும், அதேநேரத்தில் உள்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது.  கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை புயல் வேகத்தில் பரவி,  பல லட்சம் மக்களை கடும் பாதிப்பிற்குள்ளாக்கி, லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கி வருகிறது.   இந்தப் பேரிடரிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமையுடைய மத்திய மோடி அரசோ, தனது பொறுப்பைப் புறக்கணித்து விட்டது. இந்தியா முழுமைக்கும் கடந்த 73 ஆண்டுகளாக மத்திய அரசுதான் தடுப்பூசி வழங்கி வந்தது. ஆனால் மோடி அரசு அதைத் திடீரெனக் கைவிட்டு, மாநில அரசுகள் தடுப்பூசி மருந்தை தனியார் நிறுவனங்களிடம் வாங்கிக் கொள்ளுமாறு கைகாட்டுகிறது! லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் வேளையிலும், அதைப் பயன்படுத்தி தனியார் மருந்து கம்பெனிகளை கொழுக்க வைப்பது கொடூரச் செயலாகும். அதே சமயத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நாடாளுமன்ற கட்டடமும் பிரதமருக்கு வீடும் கட்டுவதில் முனைப்பாகச் செயல்படுகிறது. இச்செயல்கள் பொதுமக்களுக்கு கவலையையும் ஆத்திரத்தையும் உண்டாக்கி உள்ளன. பா.ஜ.க. மத்திய அரசு கடந்த ஏழு ஆண்டுகால ஆட்சியில், மக்கள் நலனைப் பாதிக்கும் பல்வேறு செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள், தொழிலாளர் வர்க்கத்திற்கெதிராக கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கள், குடியுரிமை திருத்தச் சட்டம், மோட்டார் வாகனச்சட்டம், புதிய கல்விக் கொள்கை, மின்சாரச் சட்டம், அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, பங்கு விற்பனை செய்வது என, நாடாளுமன்ற  ஜனநாயக முறைமைகளையும் மீறி பா.ஜ.க. அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மத்திய அரசின் இத்தகைய செயல் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றும் முக்கிய கடமை உழைக்கும் வர்க்கத்திற்கு உண்டு! ஆகவே நமது எதிர்ப்பை மத்திய மோடி அரசாங்கத்திற்கு காட்டும் வகையில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற மே-26 ஆம் நாளை இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாக கடைப்பிடிக்க டெல்லியில் போராடி வரும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டுக் குழு தீர்மானித்துள்ளது. விவசாயிகளோடு இணைந்து இந்த போராட்டத்தில் பங்கேற்க மத்திய தொழிற்சங்கங்களும் முடிவு எடுத்துள்ளன.

அனைத்து மத்திய தொழிற்சங்க முடிவுக்கு இணங்க, மே 26 ம் நாளன்று*கருப்பு பட்டை, கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அணிவோம்.  சங்க அலுவலகங்களில், பணி புரியும் தொழிற்சாலை/ நிறுவனங்கள்/ அலுவலக   வாயிலில், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவோம்!