100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலையை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது

இந்தியாவின் வாரணாசி நகரிலிருந்து 100 ஆண்டுக்கு முன்பு எடுத்துச் செல்லப்பட்ட அன்னபூர்ணா தேவி சிலை கனாடாவிலிருந்து விரைவில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மெக்கென்ஸி அருங்காட்சியகம், கலைக்கூடத்தில் இந்த சிலை இருக்கிறது. இந்த சிலையை விரைவில் பல்கலைக்கழகம் இந்தியத் தூதரகத்தில் ஒப்படைக்க இருக்கிறது. இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த போது, வாரணாசியிலிருந்து அன்னபூர்ணா தேவி சிலை கனடாவுக்கு கடத்தப்பட்டது, நார்மென் மெக்கென்ஸி என்பவரால் உருவாக்கப்பட்ட கலைக்கூடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டது. சமீபத்தில் இந்தியக் கலைஞரும் ஆய்வாளருமான திவ்யா மேஹ்ரா இந்த சிலையை அடையாளம் கண்டு அதுகுறித்து ஆய்வு நடத்தியபோது, 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இந்த சிலை எடுக்கப்பட்ட விவரம் தெரியவந்தது. இதையடுத்து, ரெஜினா பல்கலைக் கழகத்தின் இடைக்காலத் தலைவரும், துணை வேந்திருமான டாக்டர் தாமஸ் சேஸ், கனடாவுக்கான இந்தியத் தூதர் அஜய் பிஸாரியாவை காணொலி மூலம் சந்தித்து பேசி இந்த சிலை குறித்த விவரத்தை தெரிவித்தார். மெக்கென்ஸி கலைக்கூடத்தின் பிரதிநிதிகள், கனடா சர்வதேச விவகாரம் மற்றும் எல்லைப்புற சேவை அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் இந்தியத் தூதர் அஜய் பிஸாரியா பேசுகையில் “இந்தியாவின் பாரம்பரியத்தை விளக்கும் அன்னபூர்ணா தேவி சிலை இந்தியாவிடம் ஒப்படைப்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இந்தியாவின் கலாச்சாரத்தை விளக்கும் சிலையை ரெஜினா பல்கலைக்கழகம் தாமாக முன்வந்து ஒப்படைப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பல்கலைக்கழகத்தின் இந்த செயல், இந்தியா, கனடா இடையிலான உறவை மேலும் முதிர்ச்சியடைச் செய்து, வலுப்பெற வைக்கும்” எனத் தெரிவித்தார். வாரணாசியிலிருந்து கடந்த 1913-ம் ஆண்டு மெக்கென்ஸியால் இந்த சிலை இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப் பட்டிருக்கலாம் என்று ஆய்வாளரும், கலைஞருமான மேஹ்ரா தெரிவித்துள்ளார். இந்த சிலை வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள ஒரு கோயிலிருந்து திருடப்பட்டு மெக்கென்ஸி யிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம் எனத் மெஹ்ரா தெரிவித்துள்ளார். பீடத்தில் அமர்ந்தநிலையில் கையில் பெரிய கிண்ணத்தையும் மற்றொரு கையில் அன்னம் வழங்கும் கரண்டியும் வைத்திருப்பதுபோன்று தேவிசிலை அமைந்துள்ளது. வாரணாசியில் இன்றும் கங்கைநதிக் கரைஓரத்தில் அன்னப்பூர்ணா தேவி கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.