புதுவை பல்கலைக்கழகமும் பெங்களூருவில் உள்ள மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம், மின்சக்தி கருவிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள், பசுமை எரிசக்தித் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும். இந்நிகழ்வுக்கு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசி்ரியர் பிரகாஷ் பாபு தலைமை வகித்தார். இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர், “மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம், இந்தியாவில் வளர்ந்து வரும் எரிசக்தித் தேவைகளுக்கு ஏற்ப சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பராமரிக்கும் மாற்று தீர்வுகளில் பணியாற்ற எங்கள் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் ஒரு வாய்ப்பை வழங்கும்” என்று கூறினார். மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவத்தின் தலைமை இயக்குநர் பி.ஏ. சவாலே கூறுகையில், “இந்தியாவின் முதன்மை மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனமாக மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் விளங்குகிறது. புதுவை பல்கலைக்கழகத்துடனான இந்த ஒப்பந்தம், எங்கள் நவீன சோதனை வசதிகளையும் துறை சார்ந்த அனுபவத்தையும் புதுவைப் பல்கலைக்கழகத்தின் திறன்களுடன் இணைக்க உதவும்” என்று தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள், பேராசிரியர் பரிமாற்ற திட்டங்கள், வல்லுநர்களின் விரிவுரைகள், மாணவர்களுக்கான பயிற்சி வாய்ப்புகள், ஆராய்ச்சி வசதிகள், ஆய்வகங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், மின் ஆற்றல், மின்சக்தி தொடர்பான தேசிய மாநாடுகள், பயிலரங்குகளுக்கான ஏற்பாடு போன்ற வாய்ப்புகள் உருவாக்கப்படும். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். விக்டர் ஆனந்த்குமார் தமது வரவேற்பு உரையில், பல்கலைக்கழகத்தின் உலகளாவிய தொடர்பு விரிவடைந்து வருவதையும், புதுவை பல்கலைக்கழகம் – மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனம் இடையே உள்ள ஒருங்கிணைப்பு பற்றியும் பேசினார். இந்த ஒப்பந்தம், புதுச்சேரி பல்கலைக்கழகம் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்யவும் உதவும் என்றும் அவர் கூறினார். இந்த ஒப்பந்தத்தை ஒருங்கிணைத்த பசுமை ஆற்றல் தொழில்நுட்பத்துறையின் பேராசிரியர் பெ. ஏழுமலை பேசும்போது, “இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட ஒரு வருட கால கவனமான திட்டமிடலின் விளைவாகும். இது எங்கள் பேராசிரியர்களுக்கும் மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளுக்கும் இடையே தொடர்ச்சியான தொடர்புக்கான ஒரு கட்டமைப்பு தளத்தை உருவாக்குகிறது” என்று தெரிவித்தார். மதன்ஜீத் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் பேராசிரியர் பி.எம். ஜாபர் அலி தமது நன்றியுரையில் இந்த ஒப்பந்தத்தின் பலன்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த நிகழ்வில் இரு நிறுவனங்களின் பேராசிரியர்கள், பிரதிநிதிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஒப்பந்தம், புதுவை பல்கலைக்கழகம் – மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் இடையிலான கல்விப் பரிமாற்றத்தை முன்னேற்றுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.
மின்துறையில் புதுமைகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பு: புதுவை பல்கலைக்கழகமும் பெங்களூரு மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
